Thangalaan -Review 3.5/5
இயக்கம்: பா ரஞ்சித்
நடிகர்கள்: விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, முத்துக்குமார்
ஒளிப்பதிவு: கிஷோர் குமார்
இசை: ஜி வி பிரகாஷ்குமார்
கலை இயக்குனர்: மூர்த்தி
தயாரிப்பு: நீலம் ப்ரொடக்ஷன்ஸ் & ஸ்டூடியோ கிரீன்
கதைப்படி,
1850ஆம் காலகட்டத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் விக்ரம் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு சிறிய கிராமப் பகுதி அது.
நிலச்சுவாந்தாரின் கீழ் பலரும் அங்கு அடிமையாக விவசாயம் செய்து வருகின்றனர். அதில், தங்கலானான விக்ரமும் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். வலுக்கட்டாயமாக விக்ரமின் நிலத்தினை நிலச்சுவாந்தார் பிடுங்கிக் கொள்கிறார்.
வேறு வழியின்றி அவரும் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த மிராசுவிடம் அடிமையாக கூலி வேலை செய்கின்றனர். இந்நிலையில், ஆங்கிலேயரான டேனியல் விக்ரமின் கிராமத்திற்கு வந்து தான் தங்கத்தை தேடி செல்வதாகவும் அதற்கு கிராமத்தினர் உதவவும் கூறி கேட்க, கிராமத்தினர் தெறித்து ஓடி விடுகின்றனர்.
அங்கு பிசாசு இருப்பதாகவும், தங்கத்தைத் தேடி சென்றால் மரணம் தான் என்றும் நம்புகின்றனர் அக்கிராம மக்கள். மிராசுவிடம் அடிமையாக கிடப்பதற்கு தங்கத்தைத் தேடிச் சென்று வரும் பணத்தில் தனது நிலத்தை மிட்டலாம் என்றெண்ணி அந்த ஆங்கிலேயனான டேனியலுடன் செல்கிறார்.
விக்ரமுடன் பசுபதி, ஹரி கிருஷ்ணன் உட்பட சிலரும் செல்கின்றனர். செல்லும் வழியெல்லாம் சில தடங்கள் ஏற்படுகிறது. தடங்கலைக் கடந்து செல்கின்றனர்.
தங்கம் இருக்கும் பகுதியை அடைந்ததும், தனது கிராம மக்களையும் அங்கு வரவழைத்து அனைவரையும் தங்கம் தோண்ட வைக்கிறார் விக்ரம்.
ஆங்கிலேயன் தேடி வந்த தங்க புதையல் அங்கு இருந்ததா.? தங்கம் தோண்ட வந்த மக்களின் நிலை என்ன.?? விக்ரமின் கனவில் வந்து போன சூனியக்காரி யார்.?? விக்ரமிற்கும் சூனியக்காரிக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதிக் கதை.
தங்கலானாக விக்ரம் தனது கேரக்டரில் ஜொலித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் மக்கள் இப்படியான வாழ்க்கையை தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் விக்ரம். படம் ஆரம்பித்த உடனே அவருக்கான எண்ட்ரீ காட்சியிலேயே அந்த கேரக்டருக்குள் நம்மையும் பயணப்பட வைத்துவிட்டார் விக்ரம்.
இந்த கதையில், இப்படியொரு கேரக்டரில் இவர் மட்டுமே நடிக்க முடியும் என்பதை ஆணித்தனமாக கூறும்படியாக நடித்து வாழ்ந்திருக்கிறார் விக்ரம். அதிலும் சண்டைக் காட்சியில் தனது உடல் உழைப்பையும் அதிகமாகவே அர்ப்பணித்திருக்கிறார் விக்ரம்.
விக்ரமிற்கு இணையாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை பார்வதி. வேறும் சேலை மட்டும் கட்டிக் கொண்டு, தனது பிள்ளைகளை அரவணைப்பதில் ஆரம்பித்து தனது கணவனுக்காக அழும் காட்சி வரையிலும் அக்கதாபாத்திரமாகவே ஜொலித்து கண்களை விரிய வைத்திருக்கிறார் பார்வதி.
தங்கத்தை தேடிச் செல்கிறேன் என்று விக்ரம் பார்வதியிடம் கூறும் காட்சியில் கணவன் மனைவிக்குள்ளான உரையாடல் ரசிக்கும்படியாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல், அதுவரை சேலைக்கு சட்டை அணியாத பெண்கள் முதல் முறையாக சட்டை அணியும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணத்தில் இயக்குனர் தனது இயக்கத்தில் உச்சம் தொட்டுவிட்டார்.
சூனியக்காரியாக கம்பீரமாக வந்து நிற்கிறார் மாளவிகா மோகனன். அவரது உடை, தோற்றம், கண் பார்வை என சூனியக்காரியாகவே நம் கண்களுக்கு தெரிந்து நம்மை மிரள வைத்திருக்கிறார் மாளவிகா.
பெருமாளை வணங்கும் ஒரு பக்தனாக மத அரசியலை பேசும் இடங்களில் கைதட்டல் வாங்குகிறார் பசுபதி.
கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் தோண்டுவதற்காக மாண்ட பல தமிழனனின் வரலாறை தோண்டி எடுத்து ஒரு படைப்பை படைத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.
தன் மண், தன் மக்கள் என போராடும் ஒரு வீரனின் கதையை தெளிவான திரைக்கதையோடு ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். இக்கதைக்கான உழைப்பு என்பது அலப்பறியது என்பதை திரையில் பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது.
அக்காலகட்டத்தில் மண்ணுக்கான போராட்டம் எப்படியானது, நம்மை எப்படியாக நிலத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பதையெல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.
மண் சார்ந்து பேசும் அரசியல் பலமாக இருக்கிறது. கதை, திரைக்கதை என நாம் பார்த்தாலும் இவைகளுக்கு மேலாக நடிப்பு அரக்கனாக மேலோங்கி நிற்கிறார் விக்ரம்.
இப்படத்தில் இக்கதைக்கான ஹீரோவாக, இவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக் கொண்டே இருக்கும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விக்ரம்.
இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக நிற்கிற்து. ஜி வி பிரகாஷின் பின்னணி இசை படத்தினை ஒருதளத்திற்கு மேலாக தூக்கி நிறுத்தியிருக்கிறது.
ஒரு சில இடங்களில் கதை சற்று சறுக்கினாலும் க்ளைமாக்ஸில் டாப் கியர் போட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில்,
தங்கலான் – ஜொலிக்கிறான்….