தீர்க்கதரிசி விமர்சனம்

 தீர்க்கதரிசி விமர்சனம்

Dushyanth, Ajmal Ameer, Jaiwanth in Theerkatharisi Movie Stills HD

சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், பூர்ணிமா பாக்யராஜ், தேவதர்ஷினி நடிப்பில், பி ஜி மோகன் – எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் “தீர்க்கதரிசி”.

எதை பேசுகிறது இப்படம்?

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயத்தை முன் கூட்டியே கணிக்கும் ஒருவர். அந்த சக்தியை வைத்து என்ன செய்கிறார் என்பதையும், ஆணவக்கொலை பற்றியும் இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

காவல்துறையின் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார் ஸ்ரீமன். அந்த அரைக்கு வரும் ஒரு அழைப்பில் பேசும் நபர், இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் இறக்கப் போகிறார். அவரை ஒருவர் கொலை செய்யப்போகிறார் என்று கூறி போனை கட் செய்து விடுகிறார்.

காவல்துறைக்கு வரும் வழக்கமான பிராங்க் கால் என்று நினைத்து கவனக்குறைவாக விட்டு விடுகின்றனர் ஸ்ரீமன் குழுவினர். ஆனால், மறுநாள் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். இதனால் அதிர்ச்சியடையும் ஸ்ரீமன், இத்தகவலை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார்.

இந்நிகழ்வு முடிவதற்குள் அடுத்த போனும் வருகிறது, அதிலும் மர்ம நபர் சொன்னது போலவே அடுத்த சம்பவமும் நடக்கிறது.

எனவே, இது அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அஜ்மல் தலைமையிலான ஒரு குழு உருவாக்கப்படுகிறது.

நடக்க போவதை முன் கூட்டியே சொல்லும் அந்த நபர் சத்யராஜ் என்று அனைவர்க்கும் தெரிந்தாலும், எதற்காக இந்த சம்பவங்கள் நடக்கின்றன என்பது தான் படத்தின் இரண்டாம் பாதி.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் கதைக்களத்தின் பரபரப்பை கொடுக்க நினைத்துள்ளனர், இயக்குனர்களான பி ஜி மோகன் மற்றும் எல் ஆர் சுந்தரபாண்டி. தொடர் சம்பவங்களை கூடுதல் சுவாரசியமாய் அமைத்திருக்கலாம் என்ற எண்ணம்.

மேலும், முதல் பாதியில் பரபரப்பையும், இரண்டாம் பாதியில் கதையையும் நகர்த்தியுள்ளனர். அதற்கு பதிலாக முதல் பாதியிலிருந்தே கதையை நகர்த்தியிருந்தால் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கடைசி 5 நிமிடம் மட்டுமே வருகிறார் சத்யராஜ். ஆனால், அவரின் தாக்கம் படம் முழுக்க இருக்கும்.

அஜ்மலின் நடிப்பு “கோ” படத்தில் பார்த்தது போலவே மிகவும் யதார்த்தமாக இருந்தது. மேலும், பல படங்கள் நடிக்க வாழ்த்துக்கள்.

ஸ்ரீமன் தான் கதையின் நாயகனாக வருகிறார். அனுபவ நடிப்பை கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் ஸ்ரீமன்.

ஜி. பாலசுப்ரமணியனின் இசை படத்தின் ஓட்டத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

தீர்க்கதரிசி – தீர்க்கமானவன்  – (3/5)

Related post