வாழை – விமர்சனம் 4/5

 வாழை – விமர்சனம் 4/5

இயக்கம்: மாரி செல்வராஜ்

நடிகர்கள்: கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே எஸ் கே, பொன்வேல், ஜானகி

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: டிஸ்னி + ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரொடக்‌ஷன்

கலை: குமார் ஞானப்பன்

1990 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் இந்த வாழை.

கதையின் நாயகனாக சிவனைந்தாண். பள்ளி படிக்கும் சிறுவன். இவனை சுற்றித் தான் கதை நகர்கிறது. இவனது அக்காவாக வருபவர் திவ்யா துரைசாமி, அம்மாவாக வருபவர் ஜானகி.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் நடக்கும் கதை தான் இது.

அங்குள்ள மக்கள் வாழைத் தார் ஏற்றும் நாள் கூலி வேலைக்குச் செல்கின்றனர். சிறுவன் சிவனைந்தான் வார நாட்கள் முழுவதும் பள்ளிக்குச் சென்று வார விடுமுறை தினத்தில் தனது ஏழ்மைக்காக வாழைத் தார் ஏற்றும் வேலைக்குச் செல்கிறான்.

வலி நிறைந்த அந்த வேலையை செய்து, படிப்பில் முதல் மாணவனாகவும் இருக்கிறான் சிவனைந்தண். பள்ளி ஆசிரியர் நிகிலா மீது ஒரு பாசத்தையும் செலுத்தி வருகிறார் சிவணைந்தான்.

இந்நிலையில், இரண்டாம் பாதியில் இந்த கிராமத்தில் ஒரு மிகப்பெரும் சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதை முழுவதும் சிவணைந்தன் என்ற கதாபாத்திரத்தை சுற்றி நடக்கிறது. இவனது வாழ்க்கை எப்படியானது, இவனது காதல் எப்படியானது, இவனது இலட்சியம் எப்படியானது, இவனது வாழ்வியல் எப்படியானது, தாயின் மீது இருக்கும் பாசம் எப்படியானது என சிவணைந்தன் கதாபாத்திரத்தைச் சுற்றியே இந்த வாழை நகர்கிறது. அக்கதாபாத்திரத்தை நன்றாகவே உள்வாங்கி நடித்து அதற்கு வலு சேர்த்திருக்கிறார் சிவணைந்தனாக வாழ்ந்த பொன்வேல் என்ற சிறுவன்.

பொன்வேலின் தாயாக நடித்த ஜானகி அம்மா, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது குடும்பத்திற்காக அவர் படும் இன்னல்கள் வலி நிறைந்த ஒரு குடும்பத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸில் இவரது நடிப்பு கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறது.

நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் பெரிதும் பாராட்டும்படியாக இருந்தது.,

சிவணைந்தன் நண்பனாக வந்த சேகர் என்ற சிறுவனையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தனது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வாழ்வியல் கலந்த வலியோடு மிகவும் நேர்த்தியாக அதை இயக்கி மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்த வாழ்வியலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மையும் அக்கிராமத்தில் பயணப்பட வைத்துவிட்டது. கலை இயக்குனரின் பணியும் பாராட்டுதலுக்குறியது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் வாழை தான் முதல் சிறந்த படைப்பு என்றே கூறலாம்.

வாழை – கண்ணீர் வடித்த இதயம்.

Related post