வல்லவன் வகுத்ததடா விமர்சனம் 3.25 / 5

 வல்லவன் வகுத்ததடா விமர்சனம் 3.25 / 5

இயக்கம் : விநாயக் துரை
நடிகர்கள் : தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், ரெஜின் ரோஸ், அனன்யா மணி, விக்ரம் ஆதித்யா, சுவாதி மீனாட்சி
ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து
படத்தொகுப்பு : அஜய்
இசை : சகிஷ்னா சேவியர்
தயாரிப்பாளர் : விநாயக் துரை
தயாரிப்பு : போக்கஸ் ஸ்டுடியோஸ்

கதைப்படி,
கொள்ளையடிப்பதை தொழிலாகக் கொண்டிருக்கும் இரண்டு திருடர்கள், காதலை ஏமாற்றுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தி பணம் பறிக்கும் இளம்பெண், காக்கி உடையில் கயவர்களிடமும் கம்ப்ளைண்ட் கொடுக்க வருபவர்களிடமும் உண்டியல் நீட்டி பணம் வசூலிக்கும் போலீஸ் அதிகாரி, வட்டிக்கு பணம் கொடுத்து, அசலோ வட்டியோ வராத வேளையில் அசராமல் கடன்காரர்களின் உடல் உறுப்புகளை உருவும் பைனான்சியர், இவர்களுக்கு மத்தியில் தன் குடும்பத் தேவைகளுக்காகவும் அப்பாவின் உயிரைக் காப்பாற்றவும் பல இலட்சங்களை வேண்டி நிற்கும் பாவப்பட்ட இளம்பெண், இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட ஹைபர் லிங்க் கதையே “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் கதை.

இந்த ஐவரில் ஒருவனுக்கு தான் வட்டிக்கு விட்ட பணத்தை திரும்பப் பெற வேண்டும். ஒருத்திக்கு தன் தேவைகளுக்காக பெரும் தொகையை கடனாக பெற வேண்டும், மற்ற மூவருக்கும் பிறரை ஏமாற்றி அந்தப் பணத்தைக் கொண்டு வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.
இதில் பெரும் தொகை கடனாக வேண்டி நிற்கும் அந்த அபலைப் பெண்ணைத் தவிர்த்து, மற்ற நால்வருக்கும் தன் பணத்தை திரும்ப பெறுவதும், ஒருவரிடம் இருக்கும் பணத்தை மற்றொருவர் கொள்ளையடிப்பதும் தான் தேவையாக கதைப்படி மாறுகிறது.

இதனால் ஐவரும் ஒருவரையொருவர் எப்படி சந்தித்தார்கள்..? இதனால் அவர்களின் தேவை எப்படி மாறியது..? இதனால் அவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போனது…? இறுதியில் யாருடைய தேவை நிறைவேறியது…? ஐவரின் முடிவு என்ன..? என்பதை சுவாரஸ்யத்துடன் விளக்குகிறது திரைக்கதை.
திருடர்களாக வரும் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரெஜின் ரோஸ் இருவரும் மேம்பட்ட நடிப்பை படத்தின் பிற்பாதியில் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரெஜின் ரோஸ் இருவரின் நடிப்பும் மெச்சும்படி இருக்கின்றது. சிரஞ்சீவி என்னும் பெயர் விளக்கம் கேட்பதும், அதன் பின்னான காட்சிகளும் எதிர்பார்த்தது போல் இருந்தாலும் திரைக்கதையினை சுவாரஸ்யப்படுத்துகின்றன.

ஏமாற்றுக்காரியாக வரும் அனன்யா போலீஸ் அதிகாரியிடம் சிக்கிக் கொண்டு முழிக்கும் இடத்திலும், பைனான்ஸியரிடம் சாதுரியமாக நகைகளை மாற்றும் காட்சியிலும் கோபத்தையும் பதட்டத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பணத்தை தவறவிட்டு நடுரோட்டில் முழிக்கும் இடத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம்.

பைனான்சியராக வரும் விக்ரம் ஆதித்யா கடன் கொடுத்தவர்களிடம் மிரட்டல் தொனியிலும், காதலியிடம் உருகும் தொனியிலும் நடித்து கவனம் ஈர்க்கிறார். விக்ரம் ஆதித்யாவின் ஒற்றை அடியாள் மற்றும் உதவியாளாக வரும் அந்த நபரின் உடல்மொழி காட்சியின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது. அவரைவிட சிறப்பான ஒரு அடியாளை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தான் ஒட்டு மொத்த படத்திலும் கலகலப்பிற்கும் வில்லத்தனத்திற்கும் காரண கர்த்தாவாக இருக்கிறார். உடல் உறுப்புகளை உருவி மிரட்டும் பைனான்சியர் விக்ரம் ஆதித்யாவை விட இவர் வரும் காட்சிகளில் தான் அடுத்த எவர் குடியை கெடுக்கப் போகிறான் என்கின்ற எண்ணம் வருகிறது. விஷமத்தனமான கெக்கலிப்புடன் கூடிய சிரிப்பும், ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கா..? என்று கேட்கும் தொனியும் அந்தக் கதாபாத்திரம் மீது மேலும் வன்மம் ஏற்பட உதவுகிறது. உண்டியலைக் காட்டி ஸ்டேஷனுக்குள் கமிஷன் பெறும் அந்த லாவகம் சிரிப்பையும், இதுதானே யதார்த்தம் என்கின்ற உண்மையையும் உரக்க உரைக்கிறது. அவருடைய முடிவு ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது என்றாலும் திரைக்கதையில் மிகச்சிறப்பான இடத்தில் அது நிகழ்வது சிறப்பு.

அபலைப் பெண்ணாக வரும் சுவாதி மீனாட்சி படத்தில் மொத்தமாக துயரத்தை தூக்கி சுமக்கிறார். ஒட்டு மொத்த கதையும் திரைக்கதையும் அவருக்கு நன்மை செய்ய அமைக்கப்பட்டு இருந்தாலும் கூட அவரின் கதாபாத்திர வார்ப்பு அத்தனை சிறப்புடன் இல்லை. அவர் தொடர்பான காட்சிகளும் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருப்பது ஒரு குறை. இருப்பினும் அந்த உபந்நியாசம் கேட்டு திரும்பும் அவருக்கு அவர் கேட்டது கிடைக்கப் பெறும் இடம் நெகிழ வைக்கிறது.
கதையின் கரு நல்லவர்கள் துன்பப்பட்டாலும். அவர்கள் செய்த தான தர்மங்கள் ஒரு போதும் வீணாகாமல் அவர்களைக் காக்கும், மேலும் அயோக்கியர்கள் என்னதான் சுகபோகமாய் வாழ்ந்தாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயம் உண்டு என்பதை இந்த ஹைபர் லிங்க் கதை முன் மொழிகிறது.
கதையின் கரு நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும் பாவப்பட்ட பார்வையாளர்கள் மனதில் ஒருவித நம்பிக்கையை ஏற்றி வைப்பதாக இருக்கிறது. மேலும் கதைமாந்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் சூழலும், யாருக்கு எதிராக யார் எப்போது திரும்புவார்கள் என்கின்ற சுவாரஸ்யமும், அந்த அபலைப் பெண் விடுத்து மற்ற நால்வருக்கும் என்ன முடிவு கிடைக்கப் போகின்றது என்பதில் இருக்கும் திருப்பங்களும் திரைக்கதையையும் திரைப்படத்தையும் சுவாரஸ்யப்படுத்துகின்றன.

சகிஷ்னா சேவியரின் இசை காட்சிக்கு தேவையான மர்மத்தையும் திகிலையும் கொடுத்திருக்கிறது. கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு காட்சிகளின் மீதான நம்பிக்கைத்தன்மையை எந்தளவிற்கு உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

”வல்லவன் வகுத்ததடா” – வல்லமை

Related post