வீராயி மக்கள் விமர்சனம் – 3.25/5
இயக்கம்: நாகராஜ் கருப்பையா
நடிகர்கள்: வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன்
ஒளிப்பதிவு: எம்.சீனிவாசன்
இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி
எடிட்டர் – முகன் வேல்
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கிறார்.
கதைப்படி,
அறந்தாங்கியில் கதை பயணிக்க ஆரம்பிக்கிறது. கணவனை இழந்த வீராயி தனது மூன்று மகன்கள் மற்றும் மகளை ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களை வளர்த்து வருகிறார்.
அதில் மூன்றாவது மகனை படிக்க வைக்கிறார். அவர் படித்து முடித்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார்.
மூத்த மகனான வேல ராமமூர்த்தி ரமாவையும் இரண்டாவது மகனான மாரிமுத்து செந்தி குமாரியையும் மணந்து கொள்கின்றனர்.
மகளான தீபாவை பக்கத்து ஊரில் திருமணம் செய்து வைக்கிறார் வீராயி.
இரு மகன்களோடு வீராயி வாழ்ந்து வருகிறார். மருமகள்கள் வந்தவுடன் வீட்டில் புகைச்சல் ஆரம்பமாகிறது.
விவசாயம் இல்லாமல் பஞ்சம் ஏற்பட, மூத்த மகனான வேல ராமமூர்த்தி குடும்பத்தோடு திருப்பூருக்குச் சென்று விடுகிறார். இளைய மருமகளோடு வீராயிக்கு சண்டை வர, வீராயி அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
தனது தாயை சமாதானப்படுத்தி வேலா ராமமூர்த்தி வீராயியை தன்னுடனே வைத்து கவனித்துக் கொள்கிறார்.
ஒருவருக்கொருவர் பிரிந்ததும் சொத்துக்கள் பிரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மனமுடைந்த வீராயி இறந்தும் விடுகிறார்.
இந்நிலையில், வேலா ராமமூர்த்தி மகனான சுரேஷ் நந்தா, தீபாவின் மகளை காதலிக்கிறார். இந்த காதலால் பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்க நினைக்கிறார் சுரேஷ் நந்தா.
இவர்களால் குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
வேலா ராமமூர்த்தி குடும்பத்தின் பில்லராக அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் தூணாக நிற்கிறார். நடை, பாவணை என அனைத்திலும் கைதேர்ந்த நடிகனாக கம்பீரமாக நிற்கிறார் வேல ராமமூர்த்தி.
மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வெகுவாகவே கர்ந்திருக்கிறார் மறைந்த நடிகர் மாரிமுத்து. கதையில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் அக்கதாபாத்திரமாகவே மாறி தங்களுக்கான கேரக்டரை அளவாகவும் அழகாகவும் செய்து முடித்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே எட்டிப் பார்த்த தீபாவின் ஓவர் ஆக்டிங் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கிராம வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது…
படத்தின் முக்கிய பில்லராக வந்து நின்றது தீபன் சக்ரவர்த்தியின் இசை தான்.. ஒவ்வொரு இடத்திலும் அப்படியான மெனக்கெடலை கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்து அதை ரசிக்க வைத்ததில் பெரும் பங்கை எடுத்துக் கொள்கிறார் தீபன் சக்ரவர்த்தி.
மொத்தத்தில்,
வீராயி மக்கள் – பாசத்தின் அடையாளம்