பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்; விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

 பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்; விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்; விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி

’விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது’- ஆர்.கே.செல்வமணி

‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி பேசுகையில்,”இது ஒரு கனவு. ஒரு உதவி இயக்குனருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எப்படி கனவாக இருக்கிறதோ.. அதேபோல் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு.

நான் திரைத்துறைக்கு வருகை தந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நான் திரைத்துறைக்கு வருகை தந்த காலகட்டத்தில் சென்னையில் குடியிருக்க வசதியில்லாமல் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகை தர இயலாத நிலையில் தான் இருந்தேன். ஆனால் இன்று சென்னையில் சொந்தமாக வீடு, கார், மனைவி, மக்கள்.. என வசதியுடனும், மனநிறைவுடனும் வாழ்கிறேன். என்னுடைய இந்த நிலைமைக்கு நான் மட்டுமல்ல, என்னுடன் பணிபுரிந்த திரைப்பட தொழிலாளர்களும் தான் காரணம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

நான் ஒரு காட்சியை விவரித்தால்.. அதனை படமாக்க சாலக்குடி என்னுமிடத்தில் கிரேன் மற்றும் 40 கிலோ எடையுடைய மின்விளக்குகளைத் தூக்கிக்கொண்டு திரைப்பட தொழிலாளர்கள் உதவி செய்தனர். சாலக்குடி தற்போது மாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது அது ஒரு அடர்ந்த காடு. அந்தத் தருணத்தில் 40 கிலோ எடையுடைய விளக்குகளை தூக்கிக்கொண்டு சென்று, அங்கு பொருத்தி எனக்கு உதவி செய்ததால்தான் வித்தியாசமான கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது.

அதுபோன்ற தருணங்களில் கடுமையாக உழைக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் பிரதியுபகாரம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அனைவருக்கும் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதன் போதுதான் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சென்னையைப் பொறுத்தவரை எங்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வீட்டு வாடகை தான். தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் வாடகைக்கே செலவாகிறது. அதுவும் சென்னையின் மையப்பகுதியில் இல்லாமல் கூவம் கரையோரம் தான் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஒரே ஒரு அறை. அதிலேயே கழிப்பறை.. அதிலேயே சமையலறை… அதிலேயே படுக்கையறை.. அதிலேயே வரவேற்பறை.. இப்படி தான் எங்களின் காலம் செல்கிறது. இந்தநிலையில் தொழிலாளர்களின் மிகப்பெரிய தேவையாக இருப்பது சொந்த வீடு.

சென்னையில் வாடகை கொடுத்து விட்டு திரைப்பட தொழிலாளர்கள் வசிக்க இயலாது. திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல வசதிகளை நல்ல மனம் படைத்த ஏ சி சண்முகம், டாக்டர் ஐசரி கணேஷ், எஸ் ஆர் எம் உள்ளிட்ட பல பெரியோர்கள் உதவி செய்கிறார்கள். இவர்களின் மூலம் ஆண்டுதோறும் நூறு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வியும், இலவச மருத்துவ வசதியும் கிடைத்து வருகிறது. ஆனால் வீடு மட்டும் கனவாகவே இருந்து வருகிறது.

1995 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் எண்பத்தி ஐந்து ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு எங்களால் பல்வேறு காரணங்களால் வீடு கட்ட இயலவில்லை. அந்த இடத்தை மீண்டும் தமிழக அரசு எடுத்துக்கொண்டது. இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய். அந்த நிலத்தின் மதிப்பு அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு தெரியவில்லை.

அதன் பிறகு இயக்குனர் வி சி குகநாதன் மறைந்த இயக்குநர் ராமநாராயணன் இவர்களின் சீரிய முயற்சியால் 2010ஆம் ஆண்டில் 100 ஏக்கர் நிலம் திரைப்படத்துறைக்காக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் 65 ஏக்கர் பெப்சி தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிலும் 50 ஏக்கர் குடியிருப்புப் பகுதிகளாகவும், 15 ஏக்கர் படப்பிடிப்பு தளங்களாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். இன்று வரை நிறைவேறவில்லை .அது கனவாகவே தான் நீடிக்கிறது.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்து தரும் கட்டிட கட்டுமான நிறுவனங்கள் எங்களிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் பொழுது, அட்வான்ஸ் தொகை எவ்வளவு தருவீர்கள்? என கேட்டனர். அத்துடன் பணத்தை எந்த காலகட்டத்தில்… எவ்வளவு தருவீர்கள்? என்ற திட்டத்தையும் கேட்டனர். கட்டுமான பணியை தொடங்க வேண்டுமென்றால் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என்றும் சொன்னார்கள். இது இதன் திட்ட மதிப்பீடு 800 கோடி ரூபாய். இதன் 10 சதவீதம் என்பது 80 கோடி ரூபாய்.

நமக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் 9 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட இயலும். 9000 திரைப்பட தொழிலாளர்களின் கனவு நனவாகும். இதற்காக கடனுதவி பெறுவதற்கு வங்கிகளை அணுகும் போது எங்களிடம் அவர்கள் வருமான வரி சான்று உள்ளிட்ட பல விவரங்களை கேட்டனர். இங்கு யாரெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ.. அவர்களிடம் வங்கி கேட்கும் எந்த விவரங்களும் இல்லை. இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். எதிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த தருணத்தில் கடவுளின் ஆசியாக.. தற்போதைய கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு, உதவி இயக்குனர் ராஜசேகர் என்பவர் மூலம் அறிமுகமானார். அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்ல, திரைப்படத் தயாரிப்பாளரும் கூட அவரை திரைப்பட சம்மேளனம் அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் கட்டுமானத்தை நிறைவு செய்த பிறகு பணத்தை பெறுகிறேன் என்று கூறியதுடன், இதற்கான வங்கி கடனுதவி ஏற்பாடுகளையும் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அப்போது அவரிடம் முன்பணமாக எதையும் வழங்க இயலாது என்றும், இரண்டு தளங்கள் எழுப்பப்பட்ட பிறகு எங்களுடைய உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அதன் பிறகு அவர்களிடமிருந்து வசூல் செய்து தருகிறோம் என தெரிவித்தோம். இந்த உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொண்டு, இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு இந்த தருணத்தில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் முதல் கட்டமாக ஆயிரம் பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டமிட்ட போது, இதற்கு 20 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், 200 லிருந்து 250 தொழிலாளர்கள் ஆர்வமுடன் இதில் இணைந்து பணம் கட்டத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் அப்படியே ஸ்தம்பித்தது. பணம் செலுத்திய உறுப்பினர்கள், செலுத்திய பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் கூட இந்த திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ..! என்ற கவலை ஏற்பட்டது.

இந்த தருணத்தில் சிறிய நம்பிக்கை தரும் ஒளி தென்பட்டது. அவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒரு முறை அவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசியபோது, உங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வேண்டும்? எனக் கேட்டார். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அந்த தருணத்தில் எங்களுடைய இலக்கு 20 கோடி. இவரிடத்தில் 2 கோடி கேட்டாலும், அது அதிகம் என்று எண்ணி விடுவாரோ… என எண்ணி, உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுங்கள் என்று கேட்டோம். பிறகு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என விவரித்தோம்.

இதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை சலனப்படவில்லை. ஆறு மாத கால அவகாசம் தாருங்கள் அதன்பிறகு ஏதேனும் ஒரு தொகையை உதவியாக தருகிறேன் என சொன்னார். சொன்னது போல் ஓராண்டிற்குப் பிறகு என்னை தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என சொன்னார். இது போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது. எந்த பிரதிபலனும் பாராமல் இவர் வழங்கும் இந்த நிதி உதவிக்காக பெப்சி தொழிலாளர்கள் என்றென்றைக்கும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

எங்களின் குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தம் ஒன்பது தொகுதிகளாக கட்டப்பட இருக்கிறது . இதில் ஒரு தொகுதிக்கு 248 குடியிருப்புகள் இடம்பெறும். இதில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ‘விஜயசேதுபதி டவர்’ என பெயரிட்டிருக்கிறோம். இந்த பெயர் சூட்டலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள் சூட்டி இருக்கிறோம். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முழுவதும் விஜயசேதுபதி கடவுளாக தான் தெரிவார்.” என்றார்.

இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,”பெஃப்ஸியின் தலைவரான ஆர்.கே. செல்வமணி திரைத்துறைக்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் திரைப்பட தொழிலாளர்களின் இன்றைய வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? அவர்களின் அடிப்படைத் தேவை என்ன? அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதத்தை வாடகைக்காக செலவிடுகிறார்கள் என்ற மாதாந்திர கணக்கை ஆர்.கே செல்வமணி தற்போதுள்ள நிலையிலிருந்து சிந்தித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர் படங்களை இயக்கியும் நீண்ட காலமாகிவிட்டது. இந்த நிலையில் தொழிலாளர்களுடன் பழகி, அவர்களின் இன்றைய வாழ்வியலை குறித்து அறிந்து கொண்டு, அவர்களின் அடிப்படை தேவையை புரிந்து கொண்டு, அதிலும் பிரதானமாக தேவையானது எது? என்பதை தெரிந்துகொண்டு, அதை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து சிந்தித்து வருகிறார்.

எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக பணியாற்றிய போது நடைபெற்ற நிகழ்விலும் இது தொடர்பாக தெளிவாக எடுத்துரைத்தார். தற்போதும் கூட இதற்கான திட்டத்தை தெளிவாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதில் வல்லவராக இருக்கிறார். இதனால் அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய தொழிலாளர் சம்மேளனத்திற்கு அருமையான தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியும் உண்டு.. இதற்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

தெளிவான திட்டமிடலுடன் இத்தகைய பெரியதொரு திட்டத்தை முன்னெடுத்து செல்லும் ஆர் கே செல்வமணியின் செயல்பாடு உறுதியாக நிறைவேறும் என மனதார நம்புகிறேன்.

அவர் என்னிடம் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காக தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

இந்த தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர் கே செல்வமணியிடம் கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும் போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகி விடுகிறது.

அதன் பிறகு, நாம் செய்வது ஏதோ பெரிய உதவி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தத் திட்டம் 800 கோடி மதிப்பிலானது. அதில் நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான்.

இது ஒரு மிகப்பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிக சிறப்பாக தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும். நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்றும், அதற்கு சரியான தலைவர் தான் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்றும் நான் முழுதாக முழுமனதுடன் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.

நான் திரைத்துறையில் வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.

அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் 10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் சினிமாவின் நடிக்க தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன்.

இப்படி தெரியாமல் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.

வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணி காய போடக்கூடாது. சுவற்றில் ஆணி அடிக்க கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பி செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்க கூடாது.. என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.

அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாக தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஆர்கே செல்வமணி கேட்ட 10 லட்ச ரூபாய் தொகையை அலுவலத்திற்கு சென்றவுடன் காசோலையாக தந்து விடுகிறேன்.

இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டினை தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Related post