யூகி விமர்சனம்

 யூகி விமர்சனம்

நட்டி, கதிர், ஆனந்தி, நரேன், பிரதாப் போத்தன், பவித்ரா லக்ஷ்மி, ஜான் விஜய், வினோதினி வைத்தியநாதன் நடிப்பில், ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில், ரஞ்சின் ராஜ் இசையில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யூகி”. பாக்யராஜ் இக்கதையை எழுதியுள்ளார்.

கதைப்படி,

சாலையில் நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆன பிரதாப்போத்தன், தனியார் துப்புறியும் நிபுணரான நரேனிடம் உதவி கேட்கிறார்.

நரேனுக்கு உதவி செய்ய சஸ்பென்ட்டில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டரான கதிரை அனுப்பி வைக்கிறார் பிரதாப் போத்தன். நரேன் தன் உதவியாளர்களுடனும் கதிருடனும் சேர்ந்து ஆனந்தியைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள். அதே சமயம் நட்டி தலைமையில் ஒரு கும்பலும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அந்தத் தேடுதல் வேட்டை பல திருப்பங்களுடன் நகர்கிறது. கடைசியில் ஆனந்தியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

“அஞ்சாதே” படத்தின் மூலம் மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் நரேன். அப்போவே அப்டினா. இப்போ சொல்லவா வேணும். டிடெக்டிவ் ரோலில் பக்காவாக நடித்திருக்கிறார் நரேன். கண்களில் வெளிப்படும் குழப்பும் கோபமும். முகத்தில் இருக்கும் தெளிவு என அனைத்து எக்ஸ்பிரேஷன்களையும் கட்சிதமாக கொடுத்துள்ளார் நரேன்.

பவித்ராவுக்கு கணவனாக நடித்திருக்கிறார் கதிர். நடித்திருக்கிறார்… பல வலிகளையும், சிந்தனைகளையும், கோபத்தையும் கொண்ட வலுவான கதாபாத்திரம் தான் கதிரின் கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

வாடகைத்தாயாக நடித்துள்ளார் ஆனந்தி. அவர் நடிக்கும் போது, உண்மையாக கர்பமாக இருந்ததாகச் சொன்னார். சில காட்சிகளில் அவர் எவ்வளவு கடினப்பட்டு நடித்திருப்பார் என்பது நம்மால் உணர முடியும். அவரின் அர்பணிப்புக்கு வாழ்த்துக்கள்.

நட்டியின் கதாபாத்திரம் படத்தின் ஆரம்பம் முதல் ஒரு தினுசாகவே இருக்கும். படத்திற்குப் படம் சிறந்த நடிப்பு.

ஜான் விஜய் மற்றும் வினோதினியின் கதாபாத்திரங்களை பற்றி சொன்னால் சுவாரஸ்யம் குறையும். அதனால் நடிப்பை பற்றி சொல்கிறேன். இந்த கேரக்டருக்கு இருவரும் பொருத்தமான கலைஞர்களே. பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை கச்சிதமாக அமைத்துள்ளார் ரஞ்சின். ஒளிப்பதிவும் சிறப்பு.

ராஜேஷ்குமார் நாவல் வாசகர்கள் எப்படியான சஸ்பென்ஸ் த்ரில்லர்களையும் கண்டுபிடித்துவிடுவர். இப்படத்தையும் அவர்களால் எளிதில் கணிக்க முடியும்.

முதல் 20 நிமிடத்தில் இருந்த பரபரப்பும் வேகமும் படத்தின் இறுதிவரை இருந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

யூகி – யூகிக்க முடியுமா? – (3/5)

Related post