அரண்மனை 4 – விமர்சனம் 3/5

 அரண்மனை 4 – விமர்சனம் 3/5

இயக்கம் : சுந்தர் சி

நடிகர்கள்: சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், கருடா ராம், டெல்லி கணேஷ்

இசை: ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஒளிப்பதிவு: ஈ கிருஷ்ணமூர்த்தி

தயாரிப்பு: பென்ஸ் மீடியா & அவ்னி பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர் சி & ஏ.சி.எஸ் அருண்குமார்

கதைப்படி,

வக்கீலாக வரும் சுந்தர் சி’க்கு தங்கையாக வருகிறார் தமன்னா. தந்தை மற்றும் அண்ணனின் சம்மதத்தை கேட்காமல் தனது காதலனான சந்தோஷ் பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறார்.

வருடங்கள் உருண்டோட, தனது கணவர் மற்றும் மகன், மகளோடு வேறொரு ஊரில் பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் வாழத் துவங்குகிறார் தமன்னா.

அப்போது, வாக்கிங் சென்ற சந்தோஷ் பிரதாப்பை ஒரு சைத்தான் கொன்று விடுகிறது. சந்தோஷ் பிரதாப்பின் உருவத்தில் அந்த அரண்மனைக்குள் சென்று தமன்னாவின் மகளை கொல்ல நினைக்கிறது.

இதனை அறிந்த தமன்னா, தனது குழந்தைகளை காப்பாற்ற போராடுகிறார். இறுதியில், குழந்தைகளுக்காக தனது உயிரை மாய்க்கிறார்.

இதனை அறிந்து அதிர்ச்சியாகும் சுந்தர் சி’யும் அவரது அத்தையாக வரும் கோவை சரளாவும் அந்த அரண்மனைக்கு வருகிறார்கள்.

அங்கு, தங்கை தற்கொலை செய்து கொண்டார் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். அதை ஏற்க மறுக்கும் சுந்தர் சி, விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில் யார் அந்த சைத்தான்.? குழந்தையை ஏன் அது கொல்ல நினைக்க வேண்டும்.?? என்பதற்கான விடையை இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கிறார்கள்.

கதையின் நாயகியாக தமன்னா, தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்து ஒரு தாயாக தோன்றி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

வழக்கமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார் சுந்தர் சி.,

படத்திற்கு பலமே யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் தான். மூவரின் காம்போ படத்திற்கு மிகப்பெரும் பலம். இவர்கள் அடிக்கும் காமெடி லூட்டிகள் படத்தில் சிரிப்பலைகளை எகிற வைத்திருக்கிறது.

க்ளைமாக் காட்சிக்கு முன் வரும் காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து ரசிக்க வைத்திருக்கிறது.

பிரமாண்டமான பொருட் செலவில் படம் உருவாகியிருப்பது நன்றாகவே தெரிகிறது. கதைக்கான மெனக்கெடலும் காட்சிப்படுத்துவதற்கான மெனக்கெடலும் அதிகமாகவே தெரிகிறது.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக வந்து நிற்கிறது. ஒளிப்பதிவும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

வழக்காமான பேய் கதை இல்லாமல், சற்று வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

க்ளைமாக்ஸ் காட்சி மற்றும் பாடல்கள் படத்தின் தூண்கள்…

அரண்மனை 4 – குடும்பங்களின் கொண்டாட்டம்..

Related post