டைனோசர்ஸ் – விமர்சனம் 3.25/5

 டைனோசர்ஸ் – விமர்சனம் 3.25/5

எம் ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, மானேக்‌ஷா, ஜானகி, அருண் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “டைனோசர்ஸ்”.

கதைப்படி,

வட சென்னையை மையப்படுத்தி நகர்கிறது கதைக்களம். மானேக்‌ஷா மற்றும் அருண் இருவரும் கேங்க் லீடர். இருவருக்குள்ளும் போட்டி இருந்து கொண்டிருக்கிறது.. அருணின் தங்கை கணவரை கொலை செய்து விடுகிறது மானேக்‌ஷா டீம்.

ஒருகட்டத்தில், அந்த வழக்கில் இருப்பவர்களை போலீஸில் சரணடையுமாறு கூறுகிறார் மானேக்‌ஷா. அந்த டீமில் இருந்த மாறா, அப்போதுதான் திருமணம் செய்ததால், மாறாவிற்கு பதிலாக அவரது நண்பன் ரிஷி பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

இந்த விவகாரம் அருணுக்கு தெரியவர மாறாவை கொன்று விடுகிறது அருண் டீம். மாறாவின் சாவுக்கு ஒரு வகையில் காரணமாகிறார் ரிஷியின் தம்பியான உதய் கார்த்திக்.

அதன்பிறகு உதய் கார்த்திக் என்ன செய்தார்.? இந்த விஷயத்தை எப்படி கையாண்டார்.?? மானேக்‌ஷா இந்த கேசில் எப்படி உள்ளே வந்தார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

உண்மையாகவே படத்தின் ஹீரோ என்றால் அது படம் எடுக்கப்பட்ட விதம் தான். காட்சியமைப்பு ஒவ்வொன்றையும் அழகூற கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கெடல் படத்தில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

பேருந்துக்குள் நடக்கும் முதல் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் காட்சிக்கான சண்டைக் காட்சி வரையிலும், காட்சியமைப்பு, வசனங்கள், எடுக்கப்பட்ட லொகேஷன்கள், லைட்டிங்க் என அனைத்தையும் கனக்கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள்.

மண்ணு கதாபாத்திரத்தில் கதாபாத்திரமாகவே மாறி காட்சிக்கு காட்சி அப்ளாஷ் வாங்கிக் கொள்ளும்படியான நடிப்பைக் கொடுத்து அசத்திவிட்டார் உதய் கார்த்திக். வசனங்களை உச்சரிக்கும் விதம், உடல் மொழி, வாழ்வின் யதார்த்தம் என தோன்றும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆங்காங்கே அடிக்கும் பஞ்ச் டயலாக் பெரிதாகவே கவனம் ஈர்த்திருக்கின்றன.

நாயகியான சாய் பிரியா தேவா, காட்சிகளில் அழகாக வந்து செல்கிறார். பெரிதான ஸ்கோப் இல்லை என்றாலும், அழகால் கட்டிப் போட்டு விடுகிறார்.

துரை கதாபாத்திரத்தில் நடித்த மாறாவை பெரிதாகவே பாராட்டலாம். ”என்னப்பா இப்படியெல்லாம் நடிக்கிறீங்க”ன்னு கேட்குற அளவுக்கு மிகவும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மாறா. அதிலும், வெட்டுப்படும் காட்சி, வெட்டுப்பட்டு எழுந்து நடனம் ஆடும் காட்சி, வில்லனின் வீட்டிற்குள் இருக்கும் போதான பதட்டம் என அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் மிரள வைத்திருக்கிறார்.

பெரிய அளவிலான காட்சிகள் இல்லை என்றாலும், தன் தம்பிக்காகவும் தன் நட்பிற்காகவும் எடுக்கும் ரிஸ்க் காட்சிகளில் எமோஷ்னலாக்கிவிட்டார் அட்டு ரிஷி.

ஹீரோவின் தாயாக வரும் ஜானகியும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தன் மகனை ஒருவன் வெட்டுவேன் என்று கூறியதும், ஜானகி பேசும் வசனங்கள் “ப்ப்ப்ப்பா…. என்ன ஒரு துடிப்பான நடிப்பு” என்று கேட்க வைத்தது.

வில்லன்களாக வரும் மானேக்‌ஷா மற்றும் அருண் இருவரும் தங்களுக்கான காட்சியை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

பல நாட்களுக்குப் பிறகு ஒரு தரமான வட சென்னை படத்தை காண முடிந்தது. படத்தின் ஆரம்ப காட்சி எடுக்கப்பட்ட விதத்தில் இருந்து படம் நமக்குள் எளிதாக கனெக்ட் ஆகிவிடுகிறது.

முதல் பாதியில் இருந்த ஒரு வேகம், பரபரப்பினை இரண்டாம் பாதியில் கொடுக்க இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இரண்டாம் பாதியில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், நீளமான காட்சி இரண்டு எட்டிப் பார்ப்பதால் கதையின் ஓட்டம் சற்று தொய்வடைய வைக்கும்படியாக தான் உள்ளது. மிகப்பெரும் ரெளடியை விளையாட்டுத்தனமான முறையில் கையாண்டது சற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை…

எடிட்டிங்க் இன்னும் சற்று தெளிவாகவும், ஷார்ப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

போபோ சசியின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்திருக்கின்றன. மேலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருந்திருக்கிறது.

ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு வேற மாதிரியான ரகம்…

மொத்தத்தில், பலம் சற்று குறைவாக இருந்தாலும், வீரம் அதிகமாகவே உள்ளது…

டைனோசர்ஸ் – காட்சிகள் எடுக்கப்பட்ட விதத்திற்காக ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்…

Related post