ஹர்காரா விமர்சனம்

 ஹர்காரா விமர்சனம்

ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கெளதமி செளத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “ஹர்காரா”. வித்தியாசமான தலைப்போடும் வித்தியாசமான கதைகளத்தோடும் வெளிவந்திருக்கும் ஹர்காரா என்ன கூற வருகிறது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

தேனி மாவட்டம் அருகே ஒரு மலை கிராமத்தில் கதை நகர்கிறது. அங்கு இருக்கும் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் காளி வெங்கட். மலை கிராமம் என்பதால் முதியவர்கள் உதவித் தொகை, சேமிப்பு என இந்த மாதிரியான நடைமுறை அந்த அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதனால், காளி வெங்கட்டை ஒரு ஹீரோவாக பார்க்கிறது அக்கிராமம். இருந்தாலும், மலைகிராமம் என்பதால் அங்கிருந்து வெளியேற காளி வெங்கட் நினைக்கிறார். அச்சமயத்தில், மலையின் உச்சியில் இருக்கும் பகுதிக்கு கடிதம் ஒன்றை வழங்க செல்கிறார்.

அங்கு, கிராம மக்கள் தெய்வமாக வணங்கும் மாதேஸ்வரனின் வாழ்க்கையை பற்றி காளி வெங்கட்டிடம் விவரிக்கின்றனர்.

யார் இந்த மாதேஸ்வரன்.? தெய்வமாக வழிபடும் அளவிற்கு மாதேஸ்வரன் என்ன செய்திருக்கிறார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் எவ்வித பிழையும் இல்லாமல் கச்சிதமாக செய்து முடிப்பவர் நடிகர் காளி வெங்கட். தபால்காரரின் உழைப்பு என்ன.? அவர்கள் அந்த பணியை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதை வெளிச்சமாக வெளிப்படுத்தி நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார் காளி வெங்கட்.

கிராம மக்களோடு காளி வெங்கட் அடிக்கும் ஒரு சில காட்சிகள் கலகலப்பை உருவாக்குகின்றன. இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது தனி முத்திரை நடிப்பை கொடுத்திருக்கிறார் ராம் அருண் காஸ்ட்ரோ. வி1 படத்தில் கொடுத்த அதே சுறுசுறுப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் ராம் அருண்.

மாதேஸ்வரனாக தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து, வாழ்ந்திருக்கிறார் ராம் அருண். இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படைப்பா என்று வியக்கும் அளவிற்கான கலைப் பணிகள் தத்ரூபமாக கொடுத்து அசத்தியிருக்கின்றனர் படக்குழுவினர்.

ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கெடல் அதிகமாகவே கொடுக்கப்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறது. ராம் ஷங்கரின் இசை படத்திற்கு பக்க பலமாக நின்றிருக்கிறது. எந்த இடத்தில் என்ன மாதிரியான இசை கொடுக்க வேண்டுமோ அந்த மாதிரியான இசையை கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் ராம் ஷங்கர்.

லிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் என்ற இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. 150 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த கிராமத்தை காட்டும் இடமாக இருக்கட்டும், அக்கிராம மக்களின் வாழ்வியலை காட்டும் இடமாக இருக்கட்டும் இரண்டையும் நேர்த்தியாக கொடுத்து நம்மை ரசனையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டார்கள் ஒளிப்பதிவாளர்கள்.

தொழில் நுட்பத்தில் பல கட்டங்களை நாம் கடந்தாலும், அஞ்சல்துறையை தெய்வமாக பார்க்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அதிகமாகவே வெளிப்படுத்தியதற்காகவே படக்குழுவினரை வெகுவாக பாராட்டலாம்..

ஒரு சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், நிறைகள் அவைகளை ஓவர் டேக் செய்துவிடுவதால், ஹர்கராவை கொண்டாடலாம்.

ஹர்கரா – கொண்டாட வேண்டிய படைப்பு.. –  3/5

Related post