கட்டில் விமர்சனம்

 கட்டில் விமர்சனம்

இயக்கம்: ஈ வி கணேஷ் பாபு

நடிகர்கள்: ஈவி கணேஷ் பாபு, சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம்

ஒளிப்பதிவு: Wide angle Ravishankaran

இசை: ஸ்ரீகாந்த் தேவா

கதைப்படி,

சுமார் 4 தலைமுறையாக ஒரு அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் கணேஷ் பாபு குடும்பத்தினர். அண்ணன்கள், அக்கா அனைவரும் வேறு வேறு இடத்தில் செட்டில் ஆகி விட, தனது மனைவி, மகன் மற்றும் அம்மாவுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் கணேஷ் பாபு.

அரண்மனை போன்ற வீட்டினை விற்க முற்படுகின்றனர் உடன்பிறந்தவர்கள். கணேஷ் பாபு, மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் அம்மா கீதா கைலாசம் மறுத்தும் அவர்கள் வீட்டை விற்பதில் குறியாக இருக்கிறார்கள்.

அந்த வீட்டில் தலைமுறை தலைமுறையாக கண்ட கட்டில் ஒன்று இருக்கிறது. தங்களது தலைமுறை நீடிக்க அந்த கட்டிலும் ஒரு காரணம் என்று, அந்த கட்டில் மீது கணேஷ் பாபுவிற்கு அலாதி பிரியம்.

அவருக்கு மட்டுமல்லாமல், அவரது  5 வயது மகனுக்கும் அந்த கட்டில் மீது அலாதி பிரியம் தான்.

 

ஒருவழியாக, வீட்டை விற்று விடுகிறார்கள். ஆனால், அந்த கட்டிலை மட்டும் தானே எடுத்துக் கொள்வதாக கணேஷ் பாபு கூறி விடுகிறார். பெரிய கட்டில் என்பதால், அதனை வைப்பதற்கு பெரிய வீடு ஒன்றினை பார்த்து வருகிறார்.

ஆனால் வீடு கிடைக்கவில்லை என்பதால், தற்காலிகமாக ஒரு இடத்தில் அந்த கட்டிலைக் கொண்டு வைக்கிறார்.

நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியை வாடகை வீட்டில் வைத்துக் கொண்டு கணேஷ் பாபு படும் இன்னல்கள் என்னென்ன.?? கட்டிலுக்கான பந்தம் தொடர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் என்பதால் தனது நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியே நடித்திருக்கிறார் இயக்குனரும் நடிகருமான கணேஷ் பாபு.

நாயகியான நடிகை சிருஷ்டி டாங்கே காட்சிக்கு காட்சி அழகாகவும் நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அதிலும், குழந்தை பிறக்கும் சமயத்தில் கண்களை குளம் ஆக்கியிருக்கிறார்.

அம்மாவாக வரும் கீதா கைலாசமும் கதாபாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

கட்டில் மீதான ஈர்ப்பை இன்னும் சற்று அதிகமாகவே அழுத்தமாக பதிவு செய்திருக்கலாமோ என்ற எண்ணம் இருந்தது. ஆங்காங்கே காட்சிகள் சற்று தொய்வடைவதை பார்க்க முடிந்தது.

மற்றபடி, கட்டிலுக்கும் பல தலைமுறைக்குமான பந்தத்தை கண்முன்னே கொண்டு வந்ததற்காக இயக்குனர் கணேஷ் பாபுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் பாடல் ரசனை. பின்னணி இசை ஆங்காங்கே அமைதியைக் கொடுத்து கதைக்குள் நம்மை இழுத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

கட்டில் – பந்தம்… –  2.75/5

Related post