கிடா விமர்சனம்

 கிடா விமர்சனம்

இயக்கம்: ரா வெங்கட்

தயாரிப்பு: ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா

நடிகர்கள்: பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி.

இசை: தீசன்

ஒளிப்பதிவு: M.ஜெயப்பிரகாஷ்

மதுரை அருகே அழகான கிராமம் ஒன்று. அங்கு, பூ ராமு தனது மனைவி மற்றும் பேரனுடன் வாழ்ந்து வருகிறார்.

வயதாகிவிட்டதால், தன்னால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்து வந்து தனது குடும்பத்தை பார்த்து வருகிறார் பூ ராமு.

தீபாவளி நெருங்க, தனது பேரனிடம் அவனுக்கு பிடித்தமான உடை எடுத்து தருவதாக கூறுகிறார் பூ ராமு. அந்த உடை தனக்கு கிடைக்கும் என்று கனவில் பேரன் மிதந்து வர, உடை வாங்குவதற்கும் தீபாவளி தினத்தைகொண்டாட பணம் இல்லாததால் என்ன செய்வதென்று நிற்கிறார் பூராம்.

தனது பேரன் வளர்த்து வரும் கிடா ஒன்றை விற்க முடிவெடுக்கிறார் பூ ராம். கடவுளுக்கு நேர்ந்து விட்ட கிடா என்று யாரும் அதை வாங்க மறுக்கிறார்கள்.

இந்த சமயத்தில், தான் வேலை பார்த்து கறி வெட்டும் கடையில் சிறிய தகராறு ஏற்பட, தானே ஒரு கறி வெட்டும் கடையை திறப்பேன் என்று சவால் விடுத்து வருகிறார் காளி வெங்கட்.

தீபாவளி நெருங்க, காளி வெங்கட்டை நம்பி யாரும் கிடா கொடுக்காததால் கவலையில் இருக்கிறார்.

இச்சமயத்தில், பூ ராமிடம் கிடாயை தான் வாங்குவதாக கூறுகிறார் காளி வெங்கட்.

இருவரின் எண்ணமும் நிறைவேற, தீபாவளி தினத்தின் முன் இரவு, கிடாவை திருடர்கள் திருடிச் சென்று விடுகிறார்கள்.

இதனால் செய்வதறியாது நிற்கிறார் பூ ராமும் காளி வெங்கட்டும். இறுதியாக இவர்களின் இருவரின் தீபாவளி மகிழ்ச்சிகரமாக இருந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளி மட்டுமே. அந்த தீபாவளி தினத்தைக் மகிழ்ச்சியாக கொண்டாட நினைக்கும் இரு குடும்பத்தின் கதை தான் இந்த கிடா.

அவர்களுக்குள் இருக்கும் மனித நேயம், நேர்மை, நல்ல உள்ளம் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனர் என்பது போல் இல்லாமல், அனுபவ இயக்குனர்களின் இயக்கம் போல் நம்மில் உணர்வுகளை சர்வ சாதாரணமாக கடத்திச் சென்றிருக்கிறார்.

பாரதிராஜா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள்தான் கிராம வாழ்வியலை நாம் நேரில் காண்பது போன்று கடத்திச் செல்வார்கள்.

அதேபோல், கிடா படத்தினை இயக்கிய ரா வெங்கட்டும், நாமும் கிராமத்தில் கிராம மக்களோடு வாழ்ந்தது போன்ற உணர்வை கொண்டு வந்துவிட்டார்.

தீசனின் இசை மற்றும் ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு இரண்டும் படத்தினை அடுத்த தளத்திற்கு இழுத்துச் சென்று விட்டது.

கிடா – விரு(ந்)து… –  3.25/5

Related post