கொன்றால் பாவம் விமர்சனம்

 கொன்றால் பாவம் விமர்சனம்

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சுப்ரமணியம் சிவா நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கொன்றால் பாவம்”. கன்னடம், தெலுங்கு ரீமேக் செய்யப்பட்ட இப்படம் இப்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வரவுள்ளது.

எதை பேசுகிறது இப்படம்?
ஆசை ஒரு மனிதனை எந்த எல்லைக்கு முடிவு எடுக்க வைக்கும். ஒரு பெண்ணுக்கு சரியான நேரத்தில் திருமணம் நடக்காவிட்டால் அவளின் மனநிலை எப்படி இருக்கும். நாம் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தால் அதை சரியான நேரத்தில் கொடுக்க தவறினால் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்ற ஒரு வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறது இப்படம்.

கதைப்படி,

1981-ல் நடக்கும் இப்படத்தின் கதையானது, ஒரு நாளில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையக்கருவாக கொண்டுள்ளது. அழகிய கிராமத்தில் கணவன் மனைவியாக வரும் சார்லி மற்றும் ஈஸ்வரிக்கு மகளாக வருகிறார் வரலட்சுமி. தங்களுக்கு இருக்கும் குடும்ப வறுமையின் காரணமாக மகள் வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்து வருகின்றனர் சார்லியும் ஈஸ்வரி ராவும்.

இச்சமயத்தில், வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப், ஒருநாள் சார்லியின் வீட்டில் தங்கி விட்டுச் செல்வதாக கேட்க, சார்லின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

அப்போது, சந்தோஷ் பிரதாப்பிடம் நிறைய பணம் மற்றும் நகை இருப்பதை பார்த்த வரலட்சுமி அவரை கொன்று பணம், நகைகளை பறிக்க நினைக்கிறார்.

அந்த ஒருநாள் இரவுக்குள் வரலட்சுமி நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதேபடத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதி.

வரலட்சுமி இப்படத்தில் நடித்தார் என்பதை விட மல்லிகா கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. சந்தோஷ் பிரதாப் அவரிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தை காட்டும் போது, அவரின் கண்களில் வெளிப்படும் ஆச்சர்யம், ஆசை என அனைத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் வெளிப்படுத்திய குற்ற உணர்ச்சியை பற்றி பேச வார்த்தைகளே இல்லை.

கருப்பசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லியின் நடிப்பை என்னவென்று சொல்வது? குடிகாரர், தன் மகளுக்கு தேவையான விஷங்களை செய்ய முடியவில்லையே என்று வருந்தும் ஒரு பாத்திரம். அவரின் நடிப்பு எப்போதும் நம்மை கவரும் என்றாலும், மது கடையில் சந்தோஷ் பிரதாப் யார் என்று அவர் தெரிந்துகொள்ளும் காட்சியில் அவரின் அதிர்ச்சியை வெளிப்படுத்திய விதம் கைத்தட்டலுக்குரியது.

படபடப்பு, பயம், பதட்டம் என ஒரு முழுத் தேர்ச்சி பெற்ற நடிகையாக ஜொலித்திருக்கிறார் ஈஸ்வரி ராவ்.

கட்டு மஸ்தான உடம்பு, குழந்தை முகம், உலகம் சுற்றும் வாலிபனாக ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப். முந்தைய படங்களை விட இந்த படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக மாறும் படமாக அமையும்.

படத்தில் பேசப்பட வேண்டிய ஒரு நடிகனாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய செண்ட்ராயனுக்கு வாழ்த்துக்கள்.

படத்தின் ஹீரோ என்று பார்த்தால் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். தான். சிறப்பான செய்கை…. விக்ரம் வேதா, கைதி பட்டியலில் தற்போது “கொன்றால் பாவம்”.

1915 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவர் எழுதிய கதையின் கருவை மையமாக கொண்டு ஒரே கதையை ஹிட் ரகத்தில் 3 மொழிகளில் இயக்கியுள்ள இயக்குனர் தயாள் பத்மநாபன் அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தே ஆக வேண்டும்.

ஒரு இரவில் நடக்கும் பாசம், கோபம், பதட்டம், பாவம், படபடப்பு என ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியில் காட்ட வேண்டிய அனைத்து விதமான நடிப்பையும் இந்த ஒரு படத்திற்குள் அடக்கிக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். மேலும், படத்தின் முதல் காட்சிலேயே ஆசை தான் ஒரு மனிதனை வழி நடத்துகிறது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தயாள்.

ஒளிப்பதிவாளர் செழியன் இப்படத்தின் இரண்டாவது ஹீரோ, பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. வெறும், அடுப்பங்கரை நெருப்பிலிருக்கும் ஒளியை கூட்டாமலும், குறையில்லாமல் காட்சிப்படுத்தி வியப்படைய செய்திருக்கிறார் செழியன்.

ஒரு நாளில் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாறும், மாற்றும் என்பதை க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்திருந்த ட்விஸ்ட் கண்களில் கண்ணீரோடு நமக்கு உணர்த்துகிறது.

கொன்றால் பாவம் – பெஸ்ட் த்ரில்லர் –  (3.5/5)

Related post