கூ ச முனுசாமி வீரப்பன் விமர்சனம்

 கூ ச முனுசாமி வீரப்பன் விமர்சனம்

டிசம்பர் 14ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் தளத்தில் 6 தொடர்களை கொண்ட சிரீஸாக வெளியாக இருக்கிறது “கூ ச முனுசாமி வீரப்பன்”.

தமிழகத்தையும் கர்நாடகாவையும் ஆட்டிப் படைத்த கடத்தல் மன்னனாக திகழ்ந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாறை பல கட்டங்களாக பலர் கூறியும் பார்த்திருப்போம். ஆனால், அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அவரே கூறிய வீடியோ தொகுப்பு தான் இந்த கூச முனுசாமி வீரப்பன்.

1990 கால கட்டத்தில் பிரபல பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் நடத்திய கள ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பு மட்டுமல்லாது, அதில் படமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் தொடர் தான் இந்த கூச முனுசாமி வீரப்பன்.

பலரும் பல மாதிரியாக கதைகளை வீரப்பன் மீது தொடுத்திருந்தாலும், தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்ன மாதிரியான இன்னல்களை சந்தித்தேன், என்ன மாதிரியான துரோகத்தை சந்தித்தேன், என்ன மாதிரியான எதிர்ப்புகளை சந்தித்தேன் என்பதை தானே தன் வாழ்க்கையை கூறிய தொடராக இந்த தொடர் வெளிவர உள்ளது.

தனது தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் அனைவரையும் பற்றி கூறி, அவர்கள் தங்களால் பட்ட இன்னல்களையும் தான் எதற்காக சந்தன மரம் கடத்தினேன் என்பதையும் விரிவாக இந்த தொடரில் விளக்கியுள்ளார் வீரப்பன்.

ஒரு வனக்காவலனாக தான் தமிழக கர்நாடக எல்லையில் அடர்ந்த காட்டிற்குள் தனது வாழ்க்கையை நடத்தியுள்ளார். இந்த தொடரில் வீரப்பன் மட்டுமல்லாது, நடந்த வழக்கை விசாரித்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் தங்கள் கண்கூட பார்த்ததை விரிவாக இந்த தொடரில் கூறியிருக்கிறார்கள்.

காவேரி பிரச்சனை எழுந்த போது பல தமிழர்கள் கர்நாடகாவில் அடித்து துரத்தப்பட்ட போது, பலரையும் எல்லையில் காத்த வீரனாகவும் இருந்திருக்கிறார் வீரப்பன்.

அதேசமயம், சுமார் 21 காவலர்களை கன்னிவெடி வைத்து கொன்றதையும், துரோகிகள் என்று பொதுமக்கள் பலரையும் வீரப்பன் கொன்றதையும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் தன் பங்கு என்னவாக இருந்தது என்பதையும் கூறியிருக்கிறார் வீரப்பன்.

இந்த தொடரை வெறும் ஆவணப்படமாக எடுக்காமல், அதை நல்லதொரு திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஷரத் ஜோதி.

பின்னணி இசையில் காட்சிகள் ஒவ்வொன்றையும் அலற வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன். எதில் என்ன வேண்டுமோ அதை அளவோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

ராஜ்குமாரின் ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசனையோடு எடுத்து அதை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

வெறும் பேசப்படும் ஆவணப்படமாக இல்லாமல், தொடரை கொண்டு சென்றதில் வென்றிருக்கிறார் இயக்குனர் ஷரத் ஜோதி.

கூச முனுசாமி வீரப்பன் – உண்மைகளை உரக்கக் கூறிய வீரன்… –  3.5/5

Related post