லக்கி மேன் விமர்சனம்

 லக்கி மேன் விமர்சனம்

யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் லக்கி மேன்.

பருவ வயது முதல் இருந்தே தான் ஒரு அன் – லக்கி என கருதிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தான் தொட்ட காரியம் எதுவும் சரிவராது என எண்ணி வாழ்ந்து வருகிறார். இவருக்கு மனைவியாக வருகிறார் ரேச்சல். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் யோகிபாபு. ஒருநாள், சிட்பண்ட் நிறுவனத்தில் யோகிபாபுவிற்கு கார் பரிசாக விழுகிறது., இந்த கார் தான் தன் வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டமாக கருதி அதை பெரிதாக எண்ணுகிறார்.

மனைவி அந்த காரை விற்று, தொழில் தொடங்க சொல்கிறார். ஆனால், யோகிபாபுவிற்கோ அப்படி செய்ய மனமில்லை. தனது அதிர்ஷ்டம் இந்த கார் என்று அதை தன்னுடனே வைத்துக் கொள்கிறார்.

கார் கிடைத்த நேரம், செய்யும் வேலையில் அதிகமாக பணம் பார்க்கிறார். வாழ்க்கையில் முன்னேறுகிறார். தனது குடும்பத்தையும் சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார். அதேசமயம், லோக்கல் இன்ஸ்பெக்டரான வீராவின் பகையையும் சம்பாதித்துக் கொள்கிறார் யோகிபாபு.

இந்நேரத்தில் தான், வீட்டின் முன்பு இருந்த காரை யாரோ ஒருவர் திருடி விடுகிறார்., இதனால், செய்வதறியாது தவிக்கிறார் யோகிபாபு. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.,

படத்தின் நாயகனாக பல படங்களில் தோன்றினாலும், இப்படம் யோகிபாபுவிற்கு ஒரு மைல் கல் தான். ஒவ்வொரு காட்சியிலும், அவ்வளவு மெனக்கெடலை கொடுத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி தனது முத்திரையை பதிக்கும் வண்ணம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவரின் மனைவியாக நடித்த ரேச்சல், என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார். மகனாக நடித்த அந்த சிறுவனும் மனம் கவர்கிறார்..

போலீஸாக நடித்த வீரா, அனுபவ நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.

கார் பரிசாக வந்த மாதிரியான படங்கள் பல வந்தாலும், இந்த படம் அப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கும்.

தன்னை நம்பாமல், அதிர்ஷ்டம் இல்லை என்று அதன் மேல் பழி சுமத்தும் பலருக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்.

முதல் பாதியில் அழகாக சென்ற நேரத்தில் இரண்டாம் பாதியில் சற்று சறுக்கியிருக்கிறது. இருந்தாலும், க்ளைமாக்ஸில் பேலன்ஸ் செய்து அதை வெற்றிகரமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

அழகான கதையை அளவாக சொல்லி, நம்மையும் சிந்திக்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ரசனை, பின்னணி இசை மேலும் வருடுகிறது.

படத்திற்கு தேவையான வெளிச்சத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவு.

லக்கி மேன் – சூப்பர்(ஹிட்) மேன்… –  3.25/5

Related post