எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்

 எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்

இயக்கம்: ஹரி உத்ரா

ஒளிப்பதிவு: வினோத் ராஜா

இசை : அலி மிர்சாக்

நடிகர்கள்: ஷரத், ஐய்ரா, மதன் தக்‌ஷினாமூர்த்தி, கஞ்சா கருப்பு, இளையா, நரேன்

கதைப்படி,

ஊரில் மிகப்பெரும் ரெளடியான நரேனின் தம்பியாக வரும் இளையாவை ஹீரோவாக வரும் ஷரத் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்து விடுகிறார். இதனால் வெறிபிடித்தவராக மாறி விடுகிறார் நரேன்.

கொலை செய்தது ஷரத் தான் என்று அறிந்த நரேன், அவனையும் அவனோடு உடன் இருக்கும் கால்பந்தாட்ட டீமைச் சேர்ந்தவர்களையும் கொன்று விட தனது ஆட்களுக்கு உத்தரவு போடுகிறார் நரேன்.

இதற்காக, அவர்களை தேடி ஊருக்குள் செல்கிறது அந்த ரெளடி டீம். ஒருகட்டத்தில், ரெளடி டீம் அடித்து துவம்சம் செய்கிறது கால்பந்தாட்ட டீம்.

இவர்களை பந்தாடிய பிறகு, கொலை வெறி தாக்குதலோடு நரேனைத் தேடிச் செல்கின்றனர் கால்பந்தாட்ட டீம்.

கொலை வெறியோடு தாக்குதல் நடத்துவதற்கு என்ன அவசியம் நேர்ந்தது.?? இளையாவை எதற்காக ஷரத் கொன்றார்.??? என்பதற்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் கூறப்பட்டிருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் போதே, ஒடுக்கப்பட்டவர்கள், உயர்ந்தவர்கள் ,தாழ்ந்தவர்கள், நாங்க மேல வரக்கூடாது, என இப்படியான வசனம் எட்டிப் பார்க்க கதைக்களம் ஆரம்பமாகிறது.

கால்பந்து விளையாட்டு வீரர்களாக வருபவர்களே இக்கதையின் நாயகர்களாக வந்து நிற்கிறார்கள். முதல் பாதி முழுவதும் ஒரு இரவுக்குள் கிராமத்தையே சுற்றி சுற்றி முடிந்து விடுகிறது. திரும்ப திரும்ப ரெளடிகள் பசங்களைத் தேடிக் கொண்டே இருப்பது ஒருகட்டத்திற்கு மேல், காட்சிகள் சலிப்படைய வைத்துவிடுகிறது.

ரெளடிகள் கூட்டாளிகளின் மற்றொரு தலைவனாக வரும் ஆதேஷ் பாலா, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

வில்லனாக நடிகர் நரேன் மற்றும் இளையா இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

எப்போதுமே தனது நடிப்பில் தனி முத்திரை பதித்துச் செல்லும் மதன், இப்படத்தில் அவரை திக்கி திக்கி பேசும் கதாபாத்திரம் கொடுத்து அவரின் நடிப்பை கொலை செய்து வைத்திருக்கிறார்கள். அவரை சாதாரணமாகவே நடிக்க வைத்திருந்திருக்கலாம்..

கால்பந்தாட்ட வீரர்களாக நடித்த அனைவருக்கும் நடிப்பு பயிற்சியை இன்னும் அதிகமாகவே கொடுத்திருந்திருக்கலாம். வலுவான கதையில் கதாபாத்திரங்களின் பலவீனமான நடிப்பல் அந்த கதையே சிதிலடைந்திருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்டவர்கள், அமுக்குகிறார்கள், ஒடுக்குகிறார்கள் என கூறிக் கொண்டே இருப்பது கதையோடு நம்மை ஒட்ட விடாமல் தள்ளியே வைத்திருக்கிறது இந்த கதைக்களம்.

எதிர்த்து போராடுங்கள் என்று கூறுவதை விடுத்து, எதிரியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பது மாணவர்களை தடம் மாறும் செயலாகும்… இதை எப்படி ஏற்றுக் கொள்வது.?

கதையின் ஓட்டத்தில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் அடுத்து இது தான் நடக்கும் என்று கதையை நம்மை முன்கூட்டியே யூகிக்க வைத்தது படத்திற்கு பெரும் சறுக்கல் தான்.

படம் என்றால் அதில் நாயகி என்ற கதாபாத்திரம் இருக்கவேண்டும் என்ற கோணத்தில் நாயகி ஐய்ராவை படத்திற்குள் சேர்த்திருக்கிறார்கள்.

இசை பெரிதான ஈர்ப்பை கொடுக்கவில்லை. ஒளிப்பதிவு சற்று ஆறுதல்.

மொத்தத்தில்,

எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விறுவிறுப்பில்லா மேட்ச்… –  2.5/5

Related post