ரன் பேபி ரன் விமர்சனம்

 ரன் பேபி ரன் விமர்சனம்

ஆர் ஜெ பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ம்ருதி வெங்கட், ராதிகா, ஜோ மல்லூரி, தமிழ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் “ரன் பேபி ரன்”. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

எதை பேசுகிறது இப்படம்?

மருத்துவ கல்லூரியில் நடக்கும் ஊழலையும், அதன் பின்புலத்தையும் ஒரு கொலையின் மூலம் “சஸ்பென்ஸ் த்ரில்லர்” பாணியில் பேசியிருக்கிறது இப்படம்.

கதைப்படி,

முதல் காட்சியில் கல்லூரி வளாகத்தின் மாடியிலிருந்து கீழே விழுகிறார் ஸ்ம்ருதி வெங்கட். பின்னர், ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு கும்பல் துரத்த, ஆர் ஜெ பாலாஜியின் வீட்டில் தஞ்சமடைகிறார் ஐஸ்வர்யா.

மறுநாள் காலை, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வீட்டில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போகிறார் ஆர் ஜெ பாலாஜி.

பின்பு யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல், சடலத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார். அவர் செல்லும் வழியில் பல தடங்கல்கள் வருகிறது. தடங்களை தாண்டி சடலத்தை அப்புறப்படுத்தினாரா ஆர் ஜெ பாலாஜி?
ஸ்ம்ருதி வெங்கட்டுக்கு நடந்தது தற்கொலையா? கொலையா? ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது யார்? என்பது படத்தின் சுவாரஸ்யமான இரண்டாம் பாதி.

தான் இயக்கும் படத்தில் மட்டுமே நடித்து வந்த ஆர் ஜெ பாலாஜி முதல் முறையாக வேறொருவரின் இயக்கத்தில் நடித்துள்ளார். பதட்ட படும் காட்சிகளில் அளவான நடிப்பை தந்த ஆர் ஜெ பாலாஜி. கோபப்படும் காட்சி, சண்டை காட்சி என முக்கியமான சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதை மறந்து விட்டார்.

ஸ்ம்ருதி வெங்கட் இரண்டு காட்சிகள் மட்டுமே வருகிறார், வந்த காட்சிகள் சிறப்பு. ஐஸ்வர்யா ராஜேஷ் பயப்படும் காட்சிகள் நம்மையே மிரளச் செய்தது, அந்த அளவிற்கு தத்ரூபமான நடிப்பு.

ஜோ மல்லூரி, தமிழ், மரியம் ஜார்ஜ் என உடன் நடித்த அனைவரும் தங்களின் பணிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

மலையாள இயக்குனர் என்று சொன்னதுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், என்றி பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதே நிதர்சனம். ஜியன் கிருஷ்ணகுமார் ஸ்க்ரிப்டில் எந்த அளவிற்கு ஸ்டராங்காக இருந்தாரோ, அதே அளவிற்க்கு திரைக்கதையில் அலட்சியமாக இருந்து விட்டாரோ என்ற எண்ணம். முதல் பாதி கொஞ்சம் சுமார் ஆனால், இரண்டாம் பாதி சூப்பர்.

சாம் சி.எஸ் இசை இப்படத்திற்கு உறுதுணையாய் இருந்தது.

ரன் பேபி ரன் – மெடிக்கல் மாபியாவை ஓடவிட்டது –  – (2.5/5)

Related post