ஷாட் பூட் த்ரி – விமர்சனம்

 ஷாட் பூட் த்ரி – விமர்சனம்

கதை , இயக்கம், தயாரிப்பு: அருணாசலம் வைத்தியநாதன்

ஒளிப்பதிவு: சுதர்சன் ஸ்ரீநிவாசன்

இசை: ராஜேஷ் வைத்யா

கதைப்படி,

ப்ரனிதி, கைலாஷ், வேதாந்த் மூவரும் நண்பர்கள். பெரிய வசதி படைத்த இவர்கள் பள்ளி படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு, ஏழை சிறுவனான பூவையாரும் நண்பன் தான்.

கைலாஷின் அப்பா அம்மாவாக வருகிறார்கள் வெங்கட் பிரபுவும் சிநேகாவும். இருவரும் வேலை வேலை என்று பிஸியாக சுற்றி வருகிறார்கள். இதனால் தனிமையில் இருப்பதாக உணர்கிறான் கைலாஷ்.

தனக்கு துணையாக ஒரு நாய் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடிக்கும் கைலாஷ், சிநேகா மறுக்கிறார். கைலாஷ் ஃபீல் பண்ணுவதை பார்த்து அவரது நண்பர்களான ப்ரனிதி, வேதாந்த் மற்றும் பூவையார் மூவரும் ஒரு நாய் ஒன்றை பரிசாக கொடுக்கின்றனர்.

சிநேகாவை ஒருவழியாக சம்மதிக்க வைத்துவிடுகிறார் வெங்கட் பிரபு. தனது நாய்குட்டி மேக்ஸ் மீது அலாதி அன்பு வைத்திருக்கிறார் கைலாஷ். ஒரு வருடம் உருண்டோட, நாய் பெரிதாகிறது.

ஒருநாள் அந்த நாய் அபார்ட்மெண்டை விட்டு வெளியே ஓடிவிடுகிறது. தொலைந்து போன நாயை தேடி அலைகின்றனர் கைலாஷ், ப்ரனிதி, வேதாந்த் மற்றும் பூவையார்.

கடைசியாக அந்த நாயை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த கைலாஷ், ப்ரனிதி, வேதாந்த் மற்றும் பூவையார் நால்வரும் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள்.

நடித்த நடிகர்களிடம் அழகாக வேலை வாங்கிய இயக்குனர் கதையில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாய் தொலைவதும், அதை கண்டுபிடிப்பதுமாகவே கதை எடுக்க போகிறீர்கள்.

அதில் எதாவது ட்விஸ்ட் காட்சிகள் இருந்தாலும் பரவாயில்லை, எதுவுமே இல்லாமல் நீட்டி பிடித்த கயிறு போன்று ஒரே நேர்க்கோட்டில் கதை சென்று கொண்டிருப்பது படம் பார்க்கும் ரசிகர்களை எரிச்சலடைய வைத்து விடுகிறது.

நாய்க்கும் கைலாஷுக்கும் இடையே பாசத்தை இன்னும் அழுத்தமாகவே காட்டியிருந்திருக்கலாம். நாய் தொலைந்து போனதும் ”ஓ தொலைஞ்சி போச்சா அப்போ தேடலாம்” என்று அசால்ட்டாக எடுத்துக் கொண்டு தேடுவது ஒரு பிடிப்புத் தன்மை இல்லாத கதை போல நகர்ந்து செல்வது கதை மீது ஈர்ப்பு இல்லாதது நன்றாகவே தெரிகிறது.

இந்த மாதிரியான கதையில் பின்னணி இசை பெரிதாகவே கைகொடுத்திருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் வைத்யாவின் இசை அந்த மாதிரியான மேஜிக் எதுவும் நிகழ்த்தவில்லை.

சுதர்சன் ஸ்ரீநிவாசனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில்,

ஷாட் பூட் த்ரி – விளையாட்டு காட்டியிருக்கிறார்கள்… –  2.5/5

Related post