இறுகப்பற்று – விமர்சனம்

 இறுகப்பற்று – விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரதா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன்

இயக்கம் : யுவராஜ் தயாளன்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

கதைப்படி,

விக்ரம் பிரபு – ஷ்ரதா ஸ்ரீநாத் திருமணமான ஒரு வருட தம்பதிகள். ஷ்ரதா ஸ்ரீநாத், விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளுக்கு கவுன்சிங்க் கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இவர்களுக்குள் சண்டையே வருவதில்லை. ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

விதார்த் – அபர்ணதி இவர்களுக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கும் ஜோடி. தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் விதார்த். தனது மனைவி குண்டாக இருப்பது விதார்த்திற்கு பிடிக்கவில்லை. இதனாலேயே வீட்டில் அடிக்கடி தனது கோபத்தை கொட்டித் தீர்க்கிறார் விதார்த். இதனால், இருவருக்குள்ளும் இல்லற வாழ்க்கை மோசமானதாக இருக்கிறது.

ஸ்ரீ – சானியா காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. ஆரம்பத்தில் ஜாலியாக தங்களது இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வரும் இந்த ஜோடி போக போக தங்களது வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல், எப்போதும் சண்டை அழுகையுமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு ஜோடிகளும் கவுன்சிலிங்கிற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தான் வருகிறது. இந்த இரண்டு ஜோடிகளும் மீண்டும் இணைந்ததா இல்லையா.? நன்றாக இருந்த விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். விக்ரம் பிரபு தனது எமோஷன்ஸை சொல்லும் இடத்தில் கண்கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத்தும் கேரக்டராகவே மாறி தனது கதாபாத்திரத்தை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

தனது உடலை ஏற்றி இறக்கி கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் அபர்ணதி. தனது வாழ்க்கைக்காக விதார்த்திடம் கெஞ்சும் இடத்தில் அசத்தியிருக்கிறார். நிர்கதியாக ஒரு இடத்தில் நிற்கிறேன் என ஒரு நீண்ட டயலாக்கை ஒரே காட்சியில் நடித்து கண்கலங்க வைத்து விட்டார் விதார்த்.

அழகான இளம் ஜோடிகளான ஸ்ரீ மற்றும் சானியா காதல் ஜோடிகளாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். இளம் ஜோடிகளுக்குள் என்ன மாதிரியான சண்டைகள் வரும், என்ன மாதிரியான மோதல்கள் வரும், என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதையெல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சின்ன சின்ன உரசல், சின்ன சின்ன புரிதல் இன்மை, சின்ன சின்ன மனஸ்தாபங்கள் என இவற்றையெல்லாம் கலைந்தாலே தம்பதிகளுக்குள் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்பதை தெளிவாக காண்பித்திருக்கிறார்கள். இருவருக்குள்ளும் இருக்கும் காதலை அவ்வப்போது எதன் மூலமாகவாது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தால் வாழ்க்கையும் இன்பமாகும் வாழ்வும் அழகாகும் என்பதை அழகு ஓவியமாக இறுகப்பற்று மூலமாக இயக்குனர் கூறியிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒவ்வொரு இடங்களில் கண்கள் கலங்க இவரின் பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு தேவையானதை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. முதல் பாதியில் இருந்த ஒரு வறட்சியை சற்று கவனித்திருக்கலாம்.

மற்றபடி,

இறுகப்பற்று – காதல் காவியம்.. –  3.5/5

Related post