சைரன் விமர்சனம்

 சைரன் விமர்சனம்

இயக்கம்: அந்தோனி பாக்யராஜ்

நடிகர்கள்: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு

ஒளிப்பதிவு: செல்வகுமார்

இசை: ஜிவி பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ஹோம் மூவி மேக்கர்ஸ்

தயாரிப்பாளர்: சுஜாதா விஜயகுமார்

கதைப்படி,

தனது மனைவியை கொலை செய்த குற்றப் பழிக்காக ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலில் இருந்து வருகிறார் ஜெயம் ரவி.

தனது குடும்பத்தை பல வருடம் கழித்து காண்பதற்காக பரோலில் வெளியே வருகிறார். இரண்டு வார பரோலில் தனது அம்மா, தம்பிகளோடு வீட்டில் இருந்து வருகிறார். ஒரு கொலை குற்றவாளி என்பதால், ஜெயம் ரவியின் மகள் அவரை வெறுக்கிறார்.

இவரை பாதுகாக்கும் பணியை யோகிபாபு செய்து வருகிறார். மிகவும் கண்டிப்பான இன்ஸ்பெக்டராக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தினமும் கீர்த்தி சுரேஷ் பதவி வகிக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வருகிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில், லோக்கல் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். கொலை யார் செய்தது என்று கீர்த்தி சுரேஷ் விசாரணையை துவங்கும் போது ஓரிரு நாட்களில் அடுத்த கொலையும் நடக்கிறது.

இந்த கொலையை ஜெயம் ரவி தான் செய்திருப்பார் என்ற கோணத்தில் கீர்த்தி சுரேஷ் விசாரணையை துவங்குகிறார்.

இறுதியில் என்ன நடந்தது.? மனைவியை கொலை செய்த பழி ஜெயம் ரவி மீது எப்படி விழுந்தது.?? தந்தையை பாசத்தை மகள் புரிந்து கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார் ஜெயம் ரவி. வயதான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்ததற்காகவே அவரை வெகுவாக பாராட்ட வேண்டும்.

போலீஸ் வேனில் இருந்து வெளியே வரும் காட்சி, அம்மா ஆரத்தி எடுக்கும் காட்சி, தனது குடும்பத்தை சீரழித்தவர்களை பழி வாங்கும் காட்சி என ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெடல் செய்து நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் ஜெயம் ரவி.

படத்தில் ஜெயம் ரவியின் கெட்-அப் கதாபாத்திரத்திற்கு தரமாக பொருந்திருந்தது கூடுதல் பலம்.

இவருக்கு மீறிய ஒரு கதாபாத்திரம் தான் என்றாலும், அதை பேலன்ஸ் செய்வதற்கு கடுமையாக போராடி அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

வட நாட்டில் இருக்கும் ஜாதி பிரச்சனையை போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ். வில்லன்களாக நடித்தவர்களும் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

சில காட்சிகள் என்றாலும், அம்சமாக பொருந்திவிட்டு சென்றிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

க்ளைமாக்ஸ் காட்சி பைட் சீன் அதிரடி காட்டியிருக்கிறார்கள். நிகழ்கால காட்சியையும் ப்ளாஷ் பேக் காட்சியையும் பிணைத்து காட்டியிருந்தது படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தது.

சாம் சி எஸ்’ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்.. செல்வகுமாரின் ஒளிப்பதிவு சேசிங் காட்சிக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

ஜி வி பிரகாஷின் பாடல்களும் நன்றாகவே இருந்தது பெரிய பலம் தான்.

தனது முதல் படத்தையே வெற்றிகரமாக கொடுத்து, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.

பரபரவென வேகமெடுக்கும் ஒரு திரைக்கதையை கொடுத்ததற்காக இயக்குனருக்கு பெரிதாகவே ஒரு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

சைரன் – வேகம்… –  3.5/5

Related post