ஆடு ஜீவிதம் விமர்சனம் – 3.5/5

 ஆடு ஜீவிதம் விமர்சனம் – 3.5/5

இயக்கம்: ப்ளஸ்ஸீ தாமஸ்

நடிகர்கள்: ப்ருத்வி ராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கோகுல்

ஒளிப்பதிவாளர்: சுனில் கே எஸ்

இசை: ஏ ஆர் ரகுமான்

கதைப்படி,

கும்பகோணம் பகுதியை சேர்ந்த ப்ரித்வி ராஜ். தனது அம்மா மற்றும் மனைவி அமலாபாலுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

வேலைக்காக ஏஜெண்ட் ஒருவரின் உதவியுடன் அரபு நாட்டிற்கு செல்கிறார் ப்ரித்விராஜ். இவருடன்மற்றொருவரும் பணிக்குச் செல்கிறார்.

மொழி தெரியாத நாட்டிற்கு செல்லும் இவர்கள் இருவரையும், ஏர்போர்டில் இருந்து ஒருவர் ட்ரக்கில் ஏற்றி அழைத்துச் செல்கிறார்.

பாலைவனமாக இருக்கும் பகுதியில் ஒரு இடத்தில் உடன் வந்தவரையும் மற்றொரு இடத்தில் ப்ரித்விராஜையும் இறக்கிவிட்டுச் சென்று விடுகிறார் அந்த நபர்.

மறுநாள் எழுந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது. சுற்றிலும் அடர் மணல் நிறைந்த பாலைவனத்தில் தான் சிக்கிக் கொண்டோம் என்று.

அங்கு இருக்கும் ஆடுகளை மேய்ப்பதற்கு தன்னை வரவழைத்திருக்கிறார்கள் என்று. அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தால் அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதும், அடிப்பதுமாக தொடர்கிறது.

இதனால் அப்பகுதியை விட்டு தப்பிக்க முடியாத சூழல் இருக்கிறது ப்ரித்விக்கு.. குளிப்பதற்கோ, இயற்கை உபாதை செல்வதற்கோ தண்ணீரை பயன்படுத்த முடியாமல் வருடங்களாகவே தவித்து வருகிறார் ப்ரித்வி.

இந்த கொடுமையில் இருந்து ப்ரித்வி தப்பித்தாரா.?? உடன் சென்றவரின் நிலை என்னவானது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ப்ரித்வி மட்டுமே ஒட்டுமொத்த கதையும் தாங்கிச் சென்றிருக்கிறார். இந்த படத்திற்காக நிச்சயம் இவர் தேசிய விருதை தட்டிச் செல்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தனது மனைவி மீது வைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், கர்ப்பமான மனைவியை பிரியும் போது ஏற்பட்ட உணர்வை கூறும் போதாக இருக்கட்டும், கால் உடைந்து நடக்க முடியாமல் செல்லும் இடமாக இருக்கட்டும், தண்ணீர் கூட இல்லாமல் நா வறண்டு இருக்கும் இடமாக இருக்கட்டும் என ஒவ்வொரு இடத்திலும் தனது நடிப்பின் உச்சத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

உடன் வரும் நபராக நடித்து மிரட்டியிருந்த கோகுலின் நடிப்பை வெகுவாகவே பாராட்டலாம்… இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என்று ஹீரோவிற்கு இணையான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

மேலும், ஆப்ரிக்கனாக நடித்த ஜிம்மியின் நடிப்பும் பெரிதாகவே கவனம் ஈர்த்தது.

இப்படத்தின் மிகப்பெரும் ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவாளர் தான். ஒவ்வொரு காட்சியையும் உலகத் தரத்தில் கொடுத்து படம் பார்ப்பவர்களை அம்மண்ணோடு வாழ வைத்து இழுத்துச் சென்று விட்டார்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தனி ரகமாக தெரிகிறார் ஏ ஆர் ரகுமான்.

உண்மையான கதையை கண்முன்னே கொண்டு வந்து, நெஞ்சுக்குள் ஈட்டியாக பாய்ந்து பெரும் வலியை கொடுத்துவிட்டார் இயக்குனர்.

ஆடுஜீவிதம் – வாழ்க்கையின் வலி

Related post