Theal Movie Review – Fulloncinema

 Theal Movie Review – Fulloncinema

கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாளாக பிரபுதேவா வேலை செய்கிறார். திடீரென்று வரும் ஈஸ்வரி ராவ், பிரபுதேவாவின் அம்மா என்று கூறி அவரிடம் பாசம் காட்டுகிறார். யாரும் இல்லாத அனாதையாக முரட்டுத்தனமாக வளர்ந்த பிரபுதேவா ஈஸ்வரி ராவின் தாய் பாசத்துக்கு அடிமையாகி விடுகிறார். ஈஸ்வரி ராவ் திடீரென்று காணாமல் போய்விட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையோடு சொல்வது தான் ‘தேள்’ படத்தின் மீதிக்கதை.முரட்டுத்தனமான முகம் மட்டும் இன்றி, நடிப்பிலும் முரட்டுத்தனத்தை காட்டியிருக்கும் பிரபுதேவா, இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். குறைவான வசனம் பேசி நிறைவாக நடித்திருக்கும் பிரபுதேவாவின் நடிப்பு புதிதாகவும், கதாப்பாத்திரத்திற்கு பலமாகவும் இருக்கிறது.நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா தைரியமான கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். நடிப்பில் மட்டும் அல்ல நடனத்திலும் பிரபுதேவாவுக்கு சவால் விடும் அளவுக்கு, அவரை நிற்க வைத்து பேய் ஆட்டம் ஆடியிருக்கிறார்.

பிரபுதேவாவின் அம்மாவாக அறிமுகமாகி பரிதாப பட வைக்கும் ஈஸ்வரி ராவ், தான் யார்? என்பதை வெளிக்காட்டும் இடத்தில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தருவதோடு, அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்தும் விடுகிறார்.யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்கும்படி உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் சத்ரு, பரணி, இமான் அண்ணாச்சி, மாரிமுத்து என அனைத்து நடிகர்களும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் கேமரா கோயம்பேடு மார்க்கெட்டின் முழு வடிவத்தை காட்டி வியக்க வைத்திருப்பதோடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் இயல்பாக படமாக்கியுள்ளது.சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. இன்னணி இசை காட்சிகளில் உள்ள உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது.தாய் பாசம் எத்தகைய கொடிய மனம் படைத்தவனையும் மனிதனாக்கி விடும் என்ற மையக்கருவை கதையாக்கி, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஹரிகுமார், பிரபுதேவாவை இதுவரை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியதோடு, கோயம்பேடு மார்க்கெட்டில் நடக்கும் பண வியாபரம் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்.

Spread the love

Related post

You cannot copy content of this page