வெப் – விமர்சனம்

 வெப் – விமர்சனம்

இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி, ஷில்பா மஞ்சுநாத், மொட்டை ராஜேந்திரன், அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்பிரியா மலர் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் தான் “வெப்”.

கதைப்படி,

ஷில்பா மஞ்சுநாத், ஷாஸ்வி, சுபப்பிரியா மூவரும் நண்பர்கள். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இரவு நேரம் ஆனதும் பார்ட்டி, பஃப், போதை என சுற்றி வருகின்றனர் மூவரும்.

ஒருநாள் இரவு, போதை உச்சத்தில் இருக்கும் இவர்களை நட்டி கடத்தி விடுகிறார். உடன் அனன்யா மணியையும் கடத்தி விடுகிறார்.

நால்வரையும் ஒரு பழைய பங்களாவில் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகிறார் நட்டி.

தனக்கு ஒரு தங்கை இருந்ததாகவும், தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததாகவும் ஒருநாள் காரில் போதையில் இருந்த பெண்கள் சிலர் தங்கையை விபத்துக்குள்ளாக்கி கொன்று விட்டார்கள் என்றும், அதற்காகவே இந்த நால்வரையும் கடத்தி கொடுமைபடுத்துவதாகவும் ஒரு ப்ளாஷ் பேக் செல்கிறது.,

கடத்திய நான்கு பெண்களையும் நட்டி என்ன செய்தார்.? சைக்கோ போன்று நடந்து கொள்ளும் நட்டியின் நோக்கம் தான் என்ன .?? என்பதே படத்தின் மீதிக் கதை.

இளமை துள்ளலோடு நடிப்பையும் அழகையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றனர் ஷிலா, சுபா மற்றும் ஷாஸ்வி.

முதல் பாதியில் போதை, நடனம், அழுகை என நடிப்பில் ஏற்றம் இறக்கம் காண்பித்தாலும், கதை நகராமல் ஒரே இடத்தில் இருந்ததால், நமக்கு முதல் பாதி சற்று சலிப்பை ஏற்படுத்தி விட்டது.

இரண்டாம் பாதியில் ப்ளாஷ் பேக் சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது. படத்தின் மிகப்பெரும் பலமே க்ளைமாக்ஸ் மட்டுமே.. ஆம், இந்த படத்தின் நோக்கம் என்ன..?? எதற்காக இந்த படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டது என்பதற்கெல்லாம் பதில் அந்த 15 நிமிட க்ளைமாக்ஸில் கூறியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் மூலக் கதையில் முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். முதல் பாதியில் ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்க இன்னும் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருக்கலாம்.

படத்தின் மையக்கருவிற்காக இயக்குனர் ஹாரூனிற்கு எழுந்து நின்று கைதட்டல் கொடுக்கலாம்.

கார்த்திக் ராஜா பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கொடுத்திருந்திருக்கலாம். கிறிஸ்டோபர் ஜோஸப்பின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஒரு வீட்டில் காட்சிகளை அங்குமிங்குமாய் நமக்கு சலிப்பை ஏற்படுத்தாதவாறு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சுதர்சனின் எடிட் – ஷார்ப்..

வெப் – இன்றைய இளசுகளின் விழிப்புணர்வு படம்… –  2.5/5

Related post