அரிமாபட்டி சக்திவேல் விமர்சனம் – 2.75/5

 அரிமாபட்டி சக்திவேல் விமர்சனம் – 2.75/5

இயக்கம்: ரமேஷ் கந்தசாமி

நடிகர்கள்: சார்லி, பவன், மேகனா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி,

ஒளிப்பதிவு: ஜே பி மேன்

இசை: மணி அமுதவன்

தயாரிப்பாளர்: அஜீஸ், பவன்

தயாரிப்பு நிறுவனம்: LIFE CYCLE CREATIONS

திருச்சி அருகே அரிமாபட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவம் தான் இப்படத்தின் கதை. அரிமாபட்டி ஊரில் யாரேனும் வேற்று சமுதாயத்தை சார்ந்த இளைஞர்கள் இளைஞிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் உள்ளது.

அதற்கும் ஒருபடி மேல் சென்று திருமணம் ஆனவர்களை கொலை செய்யவும் அக்கிராம மக்கள் தயங்குவதில்லை.

அரிமாபட்டியில் உள்ள பெரிய தலைக்கட்டு குடும்பத்தைச் சேர்ந்தவராக வருகிறார் நாயகன் பவன். தனது ஊருக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாயகி மேகனாவை சந்தித்ததும் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு தலை காதல் இருதலை காதலாக மாறுகிறது.

ஊரை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஊர் தலைவர்கள் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர். பவனின் குடும்பம் யாரும் பவனையும் அவரது மனைவி மேகனாவையும் தொடர்பு கொள்ள கூடாது என்றும் அவரை வீட்டிலும் சேர்க்கக் கூடாது என்றும் பஞ்சாயத்தில் தீர்ப்பாக கொடுத்து விடுகின்றனர்.

நாயகன் பவன் ஊர் கட்டுப்பாட்டை ஏற்று நடந்து கொண்டாரா அல்லது ஊரை மாற்றினாரா என்பது படத்தின் மீதி கதை…

நாயகன் பவனின் முதல் படம் என்பதால், காட்சிகளில் சற்று தடுமாறி இருக்கிறார். இருந்தாலும் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை ஆங்காங்கே செய்யவும் முயற்சி செய்திருக்கிறார்.

ஒரு சில இடங்களில் தனி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மேக்னா அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்து கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார்.

மூத்த நடிகரான சார்லி தனது அனுபவ நடிப்பால் மிளிர்கிறார். கராத்தே வெங்கடேஷ், அழகு, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாகவே கொடுத்திருந்தனர்.

இப்படியான கிராமங்கள் இன்னமும் இருக்கிறதா என்ற கேள்விக்குறி எழுத்தான் செய்துள்ளது. இருந்தாலும், இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் கதையின் நோக்கம் நம்மை பெரிதாகவே தாக்குகிறது.

எதுவாயினும் காலங்கள் கடந்து மனிதன் மனிதனைப் போற்றும் இக்காலகட்டத்தில் சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டால் ஊரே அவர்களை ஒதுக்கி வைக்கும் என்பதெல்லாம், அக்கிராமம் இன்னமும் வளர்ச்சியடையவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

மனிதத்தை போற்றுவோம் இந்த ஒரு மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

ஆங்காங்கே சீரியல் போன்ற காட்சி அமைப்புகள் இருந்ததால் படத்தில் சற்று தொய்வும் ஏற்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் நன்றாகவே மெருகேற்றி கொடுத்திருந்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

அரிமாபட்டி – திருந்த வேண்டிய கிராமம்..

Related post