DeAr விமர்சனம் – 3/5

 DeAr விமர்சனம் – 3/5

அறிமுக இயக்குநர் ஆன்ந்த் ரவிசந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, காளி வெங்கட், கீதா கைலாசம், இளவரசு, நந்தினி போன்றோரின் நடிப்பில் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “DeAr”.

வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, பிருத்விராஜ் போன்றோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனை இருக்கும் நாயகிக்கும், தூங்கும் போது சிறு சத்தம் கேட்டால் கூட எழுந்துவிடும் நாயகனுக்கும் திருமணம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம்.

மூக்கில் சதை வளர்வதால் சிறு வயதில் இருந்தே தூங்கும் போது நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குறட்டை வரும் பிரச்சனை இருக்கிறது. எந்த மருத்துவ சிகிச்சையாலும் சரி செய்ய முடியாமல் தொடரும் இந்தப் பிரச்சனை அவரின் திருமணத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.
இப்பிரச்சனையை மறைத்து திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்த ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதித்து திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் முடிந்த முதல்நாள் இரவில் தன் கணவனான ஜி.வி.பிரகாஷ் ஒரு லைட் சிலிப்பர், அதாவது தூங்கும் போது ஒரு பென்சில் கீழே விழுந்தால் கூட அந்த சத்தம் கேட்டு எழுந்துவிடக்கூடியவர் என்கின்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறார் ஐஸ்வர்யா.

முதலிரவு அறையில் தூங்காமல் இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் அத்தனை பிரயத்தனங்களும் தோல்வியில் முடிய, குறட்டை பிரச்சனையால் ஜி.வி தூங்காமல் நெளிகிறார். அடுத்து வரும் நாட்களில் இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று இருவரும் கூடிப் பேசி பல்வேறு முடிவுகள் எடுக்கிறார்கள்.

ஆனால் எல்லா முடிவுகளும் சொதப்பிக் கொள்ள குறட்டைப் பிரச்சனை வேறொரு பெரும் பிரச்சனை இழுத்துக் கொண்டு வந்து நிற்கிறது. இதனால் நாயகன் நாயகி இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. மேற்கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள்..? என்பதே டியர் திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்த படிகளை கடந்து வருகிறார். காதல், வெறுப்பு மற்றும் பாசம், கோபம் போன்ற கலவையான உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தி அநாயசமாக நடித்திருக்கிறார். குழந்தையை இழந்துவிடுவோமோ என்கின்ற பரிதவிப்பில் அவர் பேசும் இடங்களும், அம்மாவிடம் பாசத்தையும், என் மீது மட்டும் ஓரவஞ்சனை காட்டுகிறாயா..?? என்பதான செல்லக் கோபத்தையும் ஒரு சேரக் காட்டும் இடத்திலும் நடிப்பில் மிளிர்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பிற்கு நல்ல தீனி போடும் கதாபாத்திரம். உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார். குழந்தை பெற்றுக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகளிலும், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து ஜி.வியிடம் பேசும் இடத்திலும் இரு நேரெதிரான மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

வீட்டை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கோபக்கார அண்ணனாக காளி வெங்கட் முத்திரை பதிக்கிறார். கதையின் ஒட்டு மொத்த சாரத்தையும் மாற்றும் மருத்துவமனைக் காட்சியில் ரோகிணி தான் ஒரு கைதேர்ந்த நடிகை என்பதை அழுத்தமாக நிருபித்திருக்கிறார்.

இளவரசுவின் கதாபாத்திரம் மிகுந்த நுட்பத்துடன் படைக்கப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கான வேலைகள் என்று எதையும் ஒதுக்காமல், தானும் அதை முன்வந்து செய்வதும், தன் மகளை அவள் வாழ்க்கையின் முடிவுகளை அவளே எடுக்க அனுமதிப்பதுமென ஆண்களுக்கான, கணவன்மார்களுக்கான ஒரு முன்மாதிரியான கதாபாத்திரமாக திகழ்கிறார்.

அம்மாவாக வரும் கீதா கைலாசம் தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அண்ணியாக நடித்திருக்கும் நந்தினி தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் அனுபவ நடிகர்களையும் தாண்டி கவனம் ஈர்க்கிறார்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகளின் கோணங்களும், காட்சிகளில் இருக்கும் நிறங்களும் கதைக்கு தேவையான உணர்வுகளைக் கடத்தி உதவியிருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டி, செவிகளுக்கு உணவூட்டுகிறது. பாடல்களும் நம்மை மயிலிறகால் வருடுகின்றன.

குறட்டை தொடர்பான பிரச்சனை, பெண்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் ஆண்கள் என முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் இருவேறுபட்ட கதைகள் சொல்லப்பட்டு, ஆரம்பத்தில் இரண்டுக்கான பிணைவு சரியாக இல்லாதது போல் தெரிந்தாலும் ரோகிணி மருத்துவமனையில் பேசும் வசனம் இரண்டு கதைகளுக்குமான ஒட்டுதலை சிறப்பாக நிகழ்த்திவிடுகிறது.

அதுமட்டுமின்றி காட்சிகளில் இருக்கும் புதுமைத்தன்மையும், உணர்வெழுச்சிகளும், முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்டிருக்கும் முதன்மையான பிரச்சனைகள், பார்வையாளர்களுக்கு அந்நியப்படாமல் நெருக்கத்தை ஏற்படுத்துவதாலும் இந்த டியர் திரைப்படத்தை அன்போடு அள்ளி அணைத்துக் கொள்ள முடிகிறது.

டியர் – அன்பின் வழி

Related post