ரோமியோ விமர்சனம் – 3/5

 ரோமியோ விமர்சனம் – 3/5

அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி, யோகிபாபு, இளவரசு, விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ரோமியோ.

ஃபரூக் J. பாஷா ஒளிப்பதிவு செய்ய, பரத் தனசேகர் இசையமைத்திருக்கிறார்.

கதைக்குள் சென்று விடலாம்..

சிறு வயதிலேயே, ஒரு கலவரத்தில் தன் தங்கையைப் பிரிந்து விடுகிறார் விஜய் ஆண்டனி. அன்று முதல், நெருப்பைப் பார்த்தாலே விஜய் ஆண்டனி பதற்றமடைய ஆரம்பித்துவிடுவார்.

வளர்ந்ததும் வீட்டின் நிலையை உயர்த்த, சிங்கப்பூருக்கு வேலை சென்று அங்கே தன் இளமையைத் தொலைக்கிறார். தான் அதுவரை தொலைத்தவற்றில், காதலிக்கும் பருவமும் ஒன்று எனக் கருத்தும் விஜய் ஆண்டனி, காதலித்துத் திருமணம் செய்து கோள்ளலாம் என நினைக்கிறார். ஒரு மரண வீட்டில், மிர்னாலினி ரவியைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துவிட, பெரியோர்கள் திருமணம் செய்துவைக்கின்றனர்.

மனைவியைக் காதலிக்கலாம் என்ற கனவுடன் கல்யாண வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் விஜய் ஆண்டனியிடம், விவாகரத்து கேட்டு அதிர்ச்சி அளிக்கிறார் மிர்னாலினி ரவி.

விவாகரத்து கிடைக்கும் முன் எப்படியாவது, மனைவியின் மனதை மாற்றி அவரையும் காதலிக்க வைக்கவேண்டும் என தீர்க்கமான முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. சினிமா நடிகையாக வேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்ற, விஜய் ஆண்டனியே ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அதற்கு அவரிடும் ஒரே கண்டிஷன், அப்படத்தில் தன்னை நாயகனாக நடிக்க வைக்கவேண்டும் என்பதே!

இதற்கிடையில், யோகிபாபுவின் யோசனைப்படி விக்ரம் என்ற பெயரில், புது மொபைல் எண்ணில் இருந்து தன்னையொரு ரசிகனாக அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பை வளர்க்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு பக்கம் வேண்டாத கணவனாக மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யப் பாடுபடுபவராகவும், இன்னொரு பக்கம் மிர்னாலினி ரவியின் மனவுறுதியை வளர்க்க உதவும் நண்பராகப் பழகி வருகிறார். தனது கணவன் தான் தனது நண்பன் விக்ரம் எனத் தெரிய வந்தால், மிர்னாலினி ரவி மனம் உடைந்து, ஒரேடியாகப் பிரிந்துவிடுவார் என எச்சரிக்கிறார் காதல் ஆலோசகரான யோகிபாபு.

அவர்கள் இருவரும் இணைந்தார்களா, காணாமல் போன விஜய் ஆண்டனியின் தங்கை என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.

‘விஜய் ஆண்டனியின் முகத்தில் நடிப்பு எப்படி வரும்?’ என்று மிர்னாலினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ் என போட்டி போட்டுக் கோண்டு கலாய்க்கிறார்கள். ஒரு நாயகனாகத் தன்னை சக நடிகர்கள் படத்திற்குள்ளேயே கலாய்க்க அனுமதித்துள்ளார் விஜய் ஆண்டனி. கதையைத் தேர்ந்தெடுக்கும் பாணியிலும் சரி, தன்னைப் பகடிக்கு உட்படுத்திக் கொள்ளும் வெளிப்படத்தன்மையிலும் சரி, விஜய் ஆண்டனி கவரவே செய்கிறார்.

யோகிபாபு, விடிவி கணேஷ், ஷா ரா ஆகியோர் இருந்தும் முழு நீள நகைச்சுவைப் படமாக இல்லாமல், ஆங்காங்கே மட்டும் கலகலப்பாக உள்ளது. தன் தந்தைக்குப் பிடிக்காத ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும்போதே, அவரை எதிர்க்கத் துணிந்து விடுகிறார் மிர்னாலினி ரவி. ஆனால், தந்தைக்கு அடங்கி தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தைச் செய்து கொள்கிறார் மிர்னாலினி ரவி. கதையின் ஓட்டத்திற்கு மாறுபவராக அவரது கதாபாத்திரத்தைப் படைக்காமல், மிர்னாலினி ரவிக்கென பிரத்தியேக கேரக்ட்ரைசேஷனைக் கொடுத்திருந்தால், படத்தின் சுவராசியம் மேலும் கூடியிருக்கும்.

ரோமியோ – மனைவியைக் காதலிப்பவன்.

Related post