என்ஜாய் விமர்சனம்

 என்ஜாய் விமர்சனம்

மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா நடிப்பில் எல்.என்.எச்.கிரியேசன் தயாரிப்பில் பெருமாள் காசி இயக்கியுள்ள படம் “என்ஜாய்”.

கதைப்படி,

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் என மூன்று நண்பர்களும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

அதேபோல, கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா என மூவரும் ஹாஸ்டல் நண்பர்களாக இருக்கின்றனர். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

காதலி இருந்தாலும், அவள் ஒரு முத்தம் தர கூட மறுக்கிறாரே என்று மதன் குமார் வயது கோளாறால் மனஉடைச்சல் ஆகிறார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ வாரத்திற்கு ஒரு பெண் என என்ஜாய் செய்து வருவது போல் வெளியில் காட்டிக்கொள்கிறார்.

திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல, சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் சூழலில் சிக்கிக்கொள்ள. அவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்குறி தான் படம்.

காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என சதா ஏங்கியபடியே தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூவருமே அவர்களுக்கான கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்த ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்த அப்பாவி பெண்ணாக நடித்திருக்கும் ஜீவி அபர்ணா கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகமே.சாருமிசாவின் கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான ரொமான்ஸும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் ஸ்கொர் செய்துள்ளனர். இவர்களின் சீனியராக நடித்த ஹாசின் நடிப்பில் அனுபவம் தெரிந்தது,

மதன்குமாரின் சீரியஸ் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம் இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம்.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையை விட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதோ நாமே சுற்றுலா போய்வந்த உணர்வை தருகின்றது. அதேபோல

கேஎம்.ரயானின் இசை இந்த படத்திற்கான பலம். அனைத்து பாடல்களும் ரசிக்கும் வகையறா தான்.

பெருமாள் காசியின் கதை தேர்வு இந்த காலகட்டத்திற்கு பொருந்தியிருந்தாலும், கிளைமாக்ஸில் கொஞ்சம் ட்ராஜெடி இருந்திருந்தால். அவர் சொல்ல வந்த கருத்து அழுத்தமாக பதிந்திருக்கும். முதல் பாதியில் எந்த காட்சியும் நம்மை சோர்வடைய செய்யாமல் இயக்கியதற்கு பாராட்டுக்கள்.

என்ஜாய் – அளவோடு என்ஜாய் பண்லாம் — (3/5)

Related post