Jango : திரைப்படம் விமர்சனம்

 Jango : திரைப்படம் விமர்சனம்

றிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் அறிமுக நாயகன் சதீஷ் குமார் மற்றும் மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி வெளியாகும் திரைப்படம் “ஜாங்கோ”.

மருத்துவராக வரும் சதீஷ்குமார், நாயகி மிர்ணாளியின் கணவர். மிர்ணாளினி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவரது வேலை சதீஷ்குமாரின் அம்மாவிற்கு பிடிக்காததால், இருவரும் தனித்தனியாக பிரிகின்றனர். இந்நிலையில், ஒருநாள் இரவில் வெளியே செல்லும் சதீஷிற்கு ஒரு விண்கல்லின் கதிர்வீச்சு அவர் மேல் விழுகிறது.

அதுநாள் முதல் “டைம் லூப்” ஆரம்பமாகிறது. ஒரே நாள் திரும்ப திரும்ப நடைபெறுகிறது. உதாரணமாக, காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அடுத்த நாளும் அதே நிகழ்வு நடைபெறுவது தான் “டைம் லூப்”.

இந்த டைம் லூப்பை வைத்து தன் மனைவிக்கு ஏற்படும் ஆபத்தை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே படத்தின் கதை.

நாயகன் சதீஷ்குமார், தனது முதல் படம் போல் இல்லாமல், ஒரு அனுபவ நடிகரை போன்று நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். சவாலான இக்கதையில் நடித்ததற்கே பாராட்டுகளை தெரிவிக்கலாம். கதையின் மூலக் கருவை தனது தோளில் சுமந்து செல்கிறார்.

மிர்ணாளியிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், தான் டைம் லூப்பில் சிக்கியிருப்பதை உணர்ந்து கோபத்தை கொப்பளிக்கும் இடமாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது மனைவிக்காக ஏங்கும் காட்சியாக இருக்கட்டும் என பல இடங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி மிர்ணாளிணி ரவி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்ய பல இடங்களை இயக்குனர் கொடுத்திருக்கிறார். கொடுக்கப்பட்ட இடத்திலெல்லாம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். பட்டும் படாத காதலை தொட்டும் தொடாமல் நகர்த்தி சென்ற இயக்குனரை பாராட்டலாம்.

கருணாகரனின் காமெடி காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறது. முதல் பாதியில் அமைதி பேரணியாக செல்லும் கதைக்களம், இரண்டாம் பாதியில் வேகமெடுக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் படத்தினை கூர்ந்து நோக்கினால் மட்டுமே படத்தின் ஒட்டுமொத்த கதையும் நம்மை வந்து சேரும்.

படத்தின் மொத்த பாராட்டும் தனி ஒருவனாக வரும் இயக்குனர் மனோ கார்த்திகேயனையே சாரும். கதையை செதுக்கிய விதம், அதை எடுத்த விதம், திரைக்கதை அமைத்த விதம் என ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கெடல் நன்றாகவே தெரிந்தது.

திரும்ப திரும்ப காட்சிகள் வந்தும் கூட, ஒரு இடத்தில் கூட சலிப்பை தட்டாமல் ஜெட் வேகத்தை கொடுத்து நம்மையும் கதைக்குள் பயணமாக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். சான் லோகேஷி எடிட்டிங் ஷார்ப்.

ஜிப்ரானின் பின்னனி இசை மிரட்டல் தான். அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற படபடப்ப்பை அதிகரிக்க, கதையை விறுவிறுப்பாக்க பின்னனி இசை இப்படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

ஆங்காங்கே டயலாக் பேசும் போது ’நான் சிங்’கில் சென்று கொண்டிருப்பதை சற்று கவனித்திருக்கலாம்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள், உங்கள் கைபேசியை தொடாமல் படத்திற்குள் மூழ்கினால் மட்டுமே “ஜாங்கோ” உங்களுக்கு வித்தியாசமான பயணத்தை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை…

ஜாங்கோ – வித்தியாசமான பயணம்… ஒருமுறை பயணிக்கலாம்.

Related post