கருமேகங்கள் கலைகின்றன – விமர்சனம்

 கருமேகங்கள் கலைகின்றன – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் பலவற்றை கொடுத்த இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கருமேகங்கள் கலைகின்றன.

கதைப்படி

ரிட்டையர்டு நீதிபதியான பாரதிராஜாவிற்கு மூன்று பிள்ளைகள் இரண்டு பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இளையவரான கௌதம் வாசுதேவ் மேனனோடு வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. அனைத்தும் இருந்தும் பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளிலும், கௌதம் வாசுதேவ் மேனன் சிறிய மனக்கசப்பில் பேசாமல் இருப்பதும் என தனிமையை உணர்ந்து தனித்து நிற்பதாக இருக்கிறார் பாரதிராஜா.

பல வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்த போது பாரதிராஜாவிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட உறவிற்கு அதிதி பாலன் பிறக்கிறார். இந்த உறவை பற்றிய கடிதம் ஒன்று பாரதிராஜாவிற்கு பல வருடத்திற்கு பிறகு கிடைக்க, பெற்ற பிள்ளைகளை விட்டு, விட்டுப்போன அந்த உறவைத் தேடி பயணப்படுகிறார் பாரதிராஜா.

இது ஒருபுறம் இருக்க, பரோட்டா கடையில் மாஸ்டராக இருக்கும் யோகிபாபு, கடைக்கு முன்பு இருக்கும் ஒரு இளம் பெண்ணிற்கு அடைக்களம் கொடுக்கிறார். திருமணம் முடிந்து கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண்ணை, தன் வீட்டில் வைத்து கவனித்து வருகிறார். அந்த பெண்ணிற்கு பிறக்கும் பெண் குழந்தையை தன் கவனிப்பில் வளர்க்க நினைக்கிறார் யோகிபாபு. அந்த குழந்தையின் மீது யோகிபாபுவும், யோகிபாபு மீது அந்த குழந்தையும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள்.

குழந்தையின் தந்தை ஒருநாள் வந்து நிற்க, குழந்தையையும் யோகிபாபுவையும் பிரித்து விடுகிறார்.
குழந்தையை பிரிந்து தவித்து வருகிறார் யோகிபாபு. இந்த சூழலில் பாரதிராஜாவும் யோகிபாபுவும் சந்தித்துக் கொள்ளும் தருணம் வருகிறது.

அதன்பிறகு இருவரின் வாழ்விலும் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்திருப்பதைப் போன்று தோன்றுகிறது பாரதிராஜாவை பார்க்கும் போது. குரல் நடுங்க அவர் பேசுவது காட்சியை மிகவும் தொய்வடைய வைத்திருக்கிறது.

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை சோக கீதம் பாடி நம்மையும் சோகத்தில் அதிகமாகவே ஆழ்த்தியிருக்கிறார் தங்கர் பச்சான்.

கதையும் தொய்வடைந்து தான் செல்கிறது என்று பார்த்தால், நடிப்பு, இசை என அனைத்தும் தொய்வடைந்து நம்மை சோதனையின் உச்சத்திற்கே கொண்டு சென்ரு விட்டார்கள் இவர்கள்.

கெளதம் வாசுதேவ் மேனன், பாரதிராஜா இருவரின் நடிப்பும் மிகவும் நடிப்புத்தன்மையாகவே இருந்தது பெரும் இழப்பு.

நமக்கு சற்று ஆறுதல் என்றால் அது யோகிபாபுவின் நடிப்பு ஒன்று தான். யோகிபாபு ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருப்பதை உணர்ந்து அதை கவனமுடன் கையாண்டிருக்கிறார் யோகிபாபு.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து செல்கிறது. பின்னணி இசை பெரிதான ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமாகவே இசையை கேட்டு வாங்கியிருந்திருக்கலாம் இயக்குனர்.

ஏகாம்பரம் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார்.

பல தரமான படைப்புகளை கொடுத்த இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு படைப்பா என கண் இமைகளை உயர்த்தி நிற்க வைத்துவிட்டார்.

படம் முழுவதும் ஏதோ ஒரு போக்கில் போக… படம் முடிந்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..

கருமேகங்கள் கலைகின்றன – தூக்கத்தை கலைக்கவில்லை… –  2.25/5

Related post