பொன்னியின் செல்வன் – 2 (புத்தக வாசிப்பாளர்) விமர்சனம்

 பொன்னியின் செல்வன் – 2 (புத்தக வாசிப்பாளர்) விமர்சனம்

ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வானதியாக ஷோபிதா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பெரும் நடிகர்கள் படையுடன் வெளியான “பொன்னியின் செல்வன் – 1” திரைப்படத்தின் வைக்கப்படியிருந்த கேள்விகளுக்கும், மர்மங்களுக்கும் விடையளித்திருக்கும் படம் “பொன்னியின் செல்வன் – 2”.

கதைப்படி,

ஆதித்த கரிகாலனை பழி தீர்க்க காத்திருக்கும் நந்தினி மற்றும் பாண்டிய ஆபத்துதவிகள் ஒரு பக்கம். மதுராந்தகனை அரசனாக வேண்டும் என்று பெரிய பழுவேட்டரையரின் படை ஒரு பக்கம்.

சோழ குலத்தையே அழிக்க நினைக்கும் பாண்டியர்கள் செய்த சாதியில் சிக்கிக்கொண்ட அருள் மொழி வர்மனும், வந்திய தேவனும் என்ன ஆனார்கள்? ராஷ்டிரகூட அரசனின் வன்மம் எந்த அளவிற்கு சென்றது? என்ற பல கேள்விகளையும் திருப்பங்களையும் கொண்டது தான் “பொன்னியின் செல்வன் – 2”.

புத்தகத்தை வாசித்த ஒருவனாக அனைவர்க்கும் ஒரு அட்வைஸ். இது கல்கியின் “பொன்னியின் செல்வன்” அல்ல, கல்கியின் கதையை மூலக்கதையாக வைத்து படமாக்கப்பட்ட மணிரத்னத்தின் ”பொன்னியின் செல்வன்”.

பொன்னியின் செல்வன் – 1 எந்த அளவிற்கு நமக்கு(புத்தகம் படித்தவர்கள் / கதை தெரிந்தவர்கள்) ஏமாற்றத்தை தந்தது என்று தெரியும். ஆனால், கதை மாற்றப்பட்டிருந்தாலும், கதாபாத்திரங்கள் நீக்கப்பட்டிருதாலும் நம்மை எந்த விதத்திலும் இந்த இரண்டாம் பாகம் ஏமாற்றாது. அதுக்கு நாங்க கேரண்டி.

நடிப்பை பற்றி இந்த விமர்சனத்தில் பேசினால், விமர்சனத்தையே “பாகம்-1”, “பாகம்-2” என்று பதிவு செய்ய வேண்டும் என்பதால், படத்தை பற்றி மட்டுமே நாம் பேச போகிறோம்.

லைவ் லொகேஷன், மிக குறைந்த கிராபிக்ஸ் காட்சிகள் என உண்மையான பிரம்மாண்டத்தை காட்டியுள்ளார் மணி ரத்னம்.

மந்தாகினியும்-சுந்தர சோழரும் சந்திக்கும் காட்சியில் தோட்டா தரணி அமைத்திருந்த செட் ஒர்க் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

வந்தியத்தேவனும்-குந்தவையும் ஆற்றின் நடுவே சந்திக்கும் காட்சி, அம்மாடி புல்லரிப்பு தான். அந்த வசனம் என்ன, ஏ.ஆர்.ரகுமானின் இசையென்ன, ரவி வர்மனின் ஒளிப்பதிவு, மணி ரத்னத்தின் லவ் டச் அனைத்தும் நம்மை ஏதோ செய்து விடும். இதற்கு மேல் ஒரு காதல் காட்சி எடுக்க முடியுமா என்று யோசித்தால். முடியும் என்று இதே படத்தில் நிரூபித்துள்ளார் மணி ரத்னம்.

ஆம், நந்தினியும்-ஆதித்த கரிகாலனும் சந்திக்கும் காட்சி நம்மை வேறு எந்த சிந்தனைக்கும் கொண்டு செல்லாது. இருவரின் நடிப்பு, அந்த காட்சியில் நடக்கவுள்ள சுவாரஸ்யம். அழுகையை தூண்டும் இசை என அந்த ஒரு காட்சி நம்மை இருக்கையில் இருக்க கட்டிபோடுகிறது.

படத்தில் வரும் இண்டர்வல் சீன் பற்றி பேச வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், அதை கண்டு மகிழ்வதே உண்மையான நிறைவை தரும்.

எங்கெல்லாம் நமக்கு ஏமாற்றம் ஏற்படும் என்றால், நமக்கு எப்போதெல்லாம் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஏமாற்றம் வரும். ஆனால், திரைக்கதையின் போக்கு நம்மை திருப்தி படுத்திவிடும்.

பெரிய வருத்தமான விஷயம் என்னவென்று பார்த்தால், க்ளைமாக்ஸ் காட்சி தான். ஒரு போர் காட்சி வருகிறது. அது புத்தகத்தில் இடம் பெறாத ஒன்று. மேலும், உண்மையான “மதுராந்தகன்”, “சேந்தன் அமுதன்” தான் என்பதை மணி ரத்னம் எதற்காக சொல்ல தவறினார் என்பது பெரிய கேள்விக்குறி.

அந்த ஒரு பகுதி புத்தகம் படித்த எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

மொத்தத்தில், புத்தகம் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி. இரண்டு ஆடியன்ஸுக்கும் சுவாரஸ்யமான ஒன்று தான் “பொன்னியின் செல்வன் – 2”.

அது எப்படி இருவருக்கும் சுவாரஸ்யத்தை தரும் என்று கேட்கிறீர்களா? அதற்கு ஒரே பதில் படத்தை பார்ப்பது மட்டும் தான்.

பொன்னியின் செல்வன் – மணி ரத்னம் டச்- (4/5)

Spread the love

Related post

You cannot copy content of this page