ரெபல் விமர்சனம் 3/5

 ரெபல் விமர்சனம் 3/5

இயக்கம்: நிகேஷ்

நடிகர்கள்: ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா.

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்

எடிட்டிங்: வெற்றி கிருஷ்ணன்

தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் ப்ரைவேட் லிட்.

தயாரிப்பாளர்: கே ஈ ஞானவேல்ராஜா

கதைப்படி,

1980 களில் நடக்கும் கதையாக படத்தின் கதை நகர்கிறது. மூணாறில் தோட்டவேலை செய்து வருபவர்கள் தான் ஜி வி பிரகாஷின் பெற்றோர்கள். இவர்களுடன், ஆதித்யா பாஸ்கரின் பெற்றோர்களும் பணிபுரிகிறார்கள்.

ஜி வி பிரகாஷும் ஆதித்யா பாஸ்கரும் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் படிப்பதற்கு சீட் கிடைக்கிறது.

இருவரும் அந்த கல்லூரியில் சேர்கின்றனர். அந்த கல்லூரியில் KSQ என்ற கட்சி அமைப்பினைச் சேர்ந்தவர்களும் SFY என்ற கட்சி அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அங்கு இருக்கின்றனர்.

கல்லூரி தேர்தலில் இந்த இரு அமைப்புகள் தான் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கல்லூரி தேர்தலின் முடிவுகள் மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இந்த கல்லூரி தேர்தல் மிக கூர்மையாகவே உற்றுநோக்கப்படும்.

முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேரும் ஜி வி பிரகாஷ், ஆதித்யா, கல்லூரி வினோத் உட்பட தமிழக மாணவர்கள் அனைவரையும் கல்லூரியில் இருக்கும் கட்சி அமைப்பினர் ரேக்கிங்க் செய்கின்றனர்.

தொடர்ந்து தமிழக மாணவ, மாணவிகள் கேரள மாணவர்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒருகட்டத்தில், அவர்களால் ஆதித்யா கொடூரமாக கொல்லப்படுகிறார்.

தனது உயிர் நண்பனை பலியானதை தாங்கிக் கொள்ள முடியாத ஜி வி பிரகாஷ், போராட்டத்தால் தமிழர்களின் உரிமையை எப்படி மீட்டெடுத்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர் நடிகர் ஜி வி பிரகாஷ். இப்படத்திலும், அதை சரியாகவே கையாண்டிருக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். எமோஷன்ஸ், உடல் மொழி, கோபம் என நாலாபுறமும் தனது திறமையை நிரூபித்து, இக்கதைக்கு நானே பொருத்தமானவன் என்பதை பல இடங்களில் நன்றாகவே கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் ஜி வி.

க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சியில், எடுத்த மெனக்கெடல் நன்றாகவே உணர முடிந்தது.

பிரேமலு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கும் நாயகி மமிதா, இப்படத்திலும் ரசிகர்களை நன்றாகவே ஈர்த்திருக்கிறார். அழகிலும் சரி நடிப்பிலும் சரி க்யூட்டான எக்ஸ்பிரஷனைக் கொடுத்து ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் மமிதா.

வில்லன்களாக நடித்த இருவரும் படத்திற்கு மிகப்பெரும் பலமாகவே வந்து நின்றிருக்கிறார்கள். ஆதித்யா பாஸ்கர் மற்றும் கல்லூரி வினோத் சற்று மீட்டர் குறைத்தே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.

மற்றபடி கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகர்கள் அனைவருமே கதைக்கேற்ற நடிப்பை அளவாகவே கொடுத்திருந்தனர்.

முதல் பாதியில் சரியான கதையை கச்சிதமான திரைக்கதையோடு நகர்த்தி கொண்டு சென்ற இயக்குனர் இரண்டாம் பாதியில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹீரோயிசத்தை சற்று குறைத்து கதையின் கருவை இன்னும் பலமாகவே தாங்கி நகர்ந்திருந்தால் படம் இன்னும் அனைவரின் கவனத்தையும் வெகுவாகவே ஈர்த்திருந்திருக்கலாம்.

எனினும் புதுமையான முயற்சியான ரெபலை வரவேற்கலாம்.

ஒளிப்பதிவு மிகப்பெரும் பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகமாகவே மெனக்கெட்டு காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இடைவேளை காட்சியின் பின்னணி இசை மிரள வைத்திருக்கிறது.

ரெபல் – போராட்டம்…

Related post