ரெஜினா விமர்சனம்

 ரெஜினா விமர்சனம்

சுனைனா, ஆனந்த் நாக் நடிப்பில், டாமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ரெஜினா”.

எதை பேசுகிறது இப்படம்?

சிலர் செய்யும் தவறால், துணை இன்றி தனியாக நிற்கும் ஒரு பெண்ணின் பழி வாங்கும் உணர்ச்சி எந்த அளவிற்கு வெளிப்படும் என்பதை களமாக கொண்டுள்ளது இப்படம்.

கதைப்படி,

சிறு வயதில் சுனைனா தனது தந்தையை இழந்து விடுகிறார். சமூக போராளியான அவரின் தந்தையை சிலர் கொலை செய்து விடுகின்றனர்.

இதனால் யாரும் இல்லாது வாழ்ந்து வரும் சுனைனாவுக்கு ஆனந்த நாக்குடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர் வங்கி ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார்.

அப்போது எதிர்பாராத விதத்தில் கொள்ளையர்கள் சிலரால் ஆனந்த் கொடூரமாக கொல்லப்படுகிறார். பல்வேறு இழப்புகளை சந்தித்து பிறகு வாழ்வில் அழகான வாழ்க்கையை தொடர்வதற்குள் காதல் கணவர் ஆனந்தின் இழப்பு சுனைனாவை பாதிக்கிறது.

தனது கணவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாததால் தனது இழப்பை சரி செய்ய சுனைனாவே களத்தில் இறங்குகிறார்.

தனது அப்பாவின் நண்பர்களுடன் சேர்ந்து பழிதீர்க்க முயற்சி செய்கிறார். இறுதியில் சுனைனா அவர்களை பழிதீர்த்தாரா? இதற்காக அவர் கையாளும் யுக்திகள் என்ன? ஆனந்த் கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன? என்பதே மீதிக்கதை…

மிக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சுனைனா. கணவனுக்காக பழி வாங்க அவர் திட்டமிடும் காட்சி, தந்தையை இழந்த மகளாகவும், கணவனை இழந்த மனைவியாகவும் அவர் வெளிப்படுத்திய எக்ஸ்பிரேஷன்கள் பாராட்ட வேண்டியவை.

சுனைனாவின் கணவராக வரும் ஆனந்த் நாக் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்திருக்கிறார்.

படத்தில் தோன்றும் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, சாய் தீனா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

பழிவாங்கும் கதையை த்ரில்லர் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குனர் டொமின் டி செல்வா.

இழப்புகளை சந்திக்கும் நாயகி பழிவாங்க கிளம்புவார் என்று எளிதாக யூகிக்க முடிந்தாலும் அதில் சில முயற்சிகளை செய்திருக்கிறார் இயக்குனர்.

எளிதில் கணிக்க கூடிய ஒரு திரைக்கதை அமைத்தது இப்படத்திற்கான சறுக்கல். பல இடங்களில் படம் திசை மாறுகிறதோ என்ற எண்ணத்தை தூண்டும் காட்சிகள். படத்தின் மீதான ஈர்ப்பை கலங்கடிக்கிறது.

கதைக்கு தேவையான பங்களிப்பை ஒளிப்பதிவாளர் பவி கே பவன் செய்திருக்கிறார். சதீஷ் நாயரின் பின்னணி இசை படத்திற்கு உதவியிருக்கிறது.

ரெஜினா – துணிச்சலானவள்  – (2.5/5)

Related post