தலைநகரம் 2 விமர்சனம்

 தலைநகரம் 2 விமர்சனம்

சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “தலைநகரம் 2”.

எதை பேசுகிறது இப்படம்?

2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் தொடர்ச்சி தான் இப்படம். தலைநகரம்’ படத்தில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பதை இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

முதல் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி, தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார்.

மறுபக்கம் வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் ரவுடிசம் செய்து அந்த பகுதிகளை தன் வசம் வைத்து வருகிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் (தலைநகரம்) அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜனுடன் இருக்கும் நடிகை பாலக் லால்வானியை கடத்தி மயக்க நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார் தென் சென்னை ரவுடி பிரபாகர்.

இந்த நடிகை கடத்தல் பிரச்சனையில் சுந்தர்.சியை சிக்க வைத்து விடுகின்றனர். இந்த பிரச்சனையில் தம்பி ராமையாவும் சிக்குகிறார். இவரை காப்பாற்ற மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுக்கிறார் சுந்தர்.சி. அதன்பின் 3 ரவுடிகளும் சுந்தர்.சியை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.

அதன்பின் சுந்தர்.சியின் திட்டம் என்ன? அந்த மூன்று ரவுடிகளுடன் இருந்த பகை என்ன ஆனது? சுந்தர்.சியின் வாழ்க்கை எப்படி மாறியது? என்பது படத்தின் மீதிக்கதை…

வழக்கமாக ஆக்ஷன் காட்சிகளில் கத்தியும், பன்ச் டயலாக் பேசியும் அதகளம் செய்து வந்த சுந்தர்.சி இப்படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அப்டேட் ஆகியுள்ளார். மிக “ரா”வான ஆக்ஷன் காட்சிகளை வைத்து ரத்த பூமியை உருவாக்கிவிட்டார் சுந்தர்.சி.

மூன்று ரவுடிகளாக வருபவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். பாலக் லால்வானி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் தம்பி ராமையா.

தலைநகரம் முதல் பாகம் போலவே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.இசட்.துரை. வழக்கமான கமெர்சியல் படங்களை போன்று இல்லாமல், கதையை மட்டுமே கவனத்தில் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.

ஒரே குறை என்றால், தலைநகரம் உனக்கு செட் ஆகாது என்ற வசனத்தை, தலைநகரம் என்ற படத்தில் வைத்தது தான்.

ரவுடிகளின் மிரட்டல் வெறும் வசனமாகவே கடந்து செல்கிறது. லாஜிக் மீறல்களை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தலைநகரம் 2 – வேகம் எடுத்திருக்கலாம்  – (2.75/5)

Related post