தூக்குதுரை விமர்சனம்

 தூக்குதுரை விமர்சனம்

இயக்கம்: டெனீஸ் மஞ்சுநாத்

நடிகர்கள்: யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்றாயன், மாரிமுத்து

ஒளிப்பதிவு: ரவி வர்மா

இசை: கே எஸ் மனோஜ்

கதைப்படி,

கைலாசம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் காதலர்கள் தான் யோகிபாபுவும் இனியாவும். அந்த கிராமத்திற்கு தலைவனாக இருக்கிறார் இனியாவின் தந்தையான மாரிமுத்து.

இவர்களுக்கு தான் கோவிலின் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. மாரிமுத்துவிடம் தான் அரசர் காலத்து விலையுயர்ந்த கிரீடம் ஒன்றும் இருக்கிறது.

காதலுக்கு வழக்கம் போல், நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்க, கிராமத்தை விட்டே ஓடுகிறது இந்த ஜோடி. அந்த சமயத்தில், மாரிமுத்துவின் ஆட்கள் யோகிபாபுவை கொன்று கிணற்றில் வீசி விடுகின்றனர். அதே சமயம், விலை உயர்ந்த கிரீடமும் அந்த கிணற்றில் சிக்கி விடுகிறது.

அதன்பிறகு, யோகிபாபுவின் ஆவியானது அந்த கிராமத்தைத் தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. இனியா அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்.

வருடங்கள் உருண்டோட, கிணற்றில் புதைந்து கிடக்கும் அந்த கிரீடத்தை கைப்பற்ற சின்ன திருடர்களான மகேஷ், பால சரவணன் இருவரும் கைலாசம் கிராமத்திற்கு வருகின்றனர்.

இறுதியில், கிணற்றில் இருக்கும் யோகிபாபுவின் ஆவியை தாண்டி அந்த கிரீடத்தை இருவரும் கைப்பற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் காமெடி பண்ணுவதற்கான இடம் அதிகமாக இருந்தும், இயக்குனர் அதை செய்யத் தவறியதே படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல்.

யோகிபாபுவின் காமெடியாக இருக்கட்டும், பால சரவணனின் காமெடியாக இருக்கட்டும் இரண்டு பேருமே ஒரு இடத்தில் கூட சிரிப்பைக் கொண்டு வர முடியவில்லை.

மொட்டை ராஜேந்திரன் காமெடிக்கு ட்ரை செய்திருக்கிறார். ஆனால், அதுவும் எடுபடாமல் போனது தான் ஏமாற்றம்.

தனக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்திருக்கிறார் நாயகி இனியா. ஒளிப்பதிவு மற்றும் இசை சற்று ஆறுதல்.

காமெடி தான் படத்தில் பிரதானம் என்றால், அதற்காக இன்னும் அதிகமாகவே மெனக்கெடல் செய்திருக்கலாமே.??

தூக்குதுரை – வலு இல்லை துரை – 2.5/5

Spread the love

Related post