வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும் புத்தகம் வெளியீடு
வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் எழுதிய “வ்ன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் “வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இருக்கிறார்.
இந்த நூலில் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைத்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் உண்மையான தகவல்களுடன் , அதில் பலியான 25 தியாகிகளின் முழு விவரங்களும், அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து அவர்கள் குடும்பங்களுக்கு திமுக அளித்த நன்மைகளின் முழு விவரங்கள் உட்பட இதுவரை வெளிவராத பல உண்மைகள் ஆதாரத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நூலை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திரு. சி.என்.இராமமூர்த்தி அவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.ஏ.கே. வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் திரு.அன்புராஜ், மாநில செய்தி தொடர்பாளர் திரு. கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.