வாழ்வு தொடங்குமிடம் நீதானே விமர்சனம்

 வாழ்வு தொடங்குமிடம் நீதானே விமர்சனம்

இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் வாழ்வு தொடங்குமிடம் நீதானே.

இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். தன் பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடியில், இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து படம் எடுப்பதற்காக வினோதா என்ற பெண் வருகிறார்.

ஷகிராவின் தந்தை, வினோதாவை தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறி விடுகிறார். இந்த சமயத்தில் வினோதாவிற்கும் ஷகிராவிற்கும் காதல் மலர்கிறது.

இந்த காதலை வினோதா, ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். அவர், வினோதாவையும் ஷகிராவையும் அடித்து விரட்டுகிறார்.

ஷகிராவிற்கு இர்பான் என்பவரை அவசரமாக திருமணம் செய்து முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள். இர்பானிடம் நடந்தவற்றை கூறி தன் காதலை சேர்த்து வைக்கும்படி கூறுகிறார் ஷகிரா.

ஷகிராவின் காதல் கைகூட இர்பான் உதவி செய்கிறார். இறுதியில் இந்த சமுதாயம் இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நிராஞ்சனா, சுருதி பெரியசாமி இருவரும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தன் பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழலாம் என அரசு பல முறை அறிவித்தும் அதற்கான சரியான விழிப்புணர்வு இன்னமும் இல்லை என்றே கூறலாம்.

நகர்புறங்களில் சரியான புரிதல் இல்லாத போது, கிராம புறங்களில் மட்டும் எப்படி இதற்கான புரிதலை நாம் எதிர்பார்க்க முடியும்.? அதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்படியான அழுத்தமான கதை இதில் சற்று குறைவு தான். எங்களை சேர விடுங்கள் என்று கூறினால் மட்டும் இங்கு சேர்த்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருக்காமல், அவர்களின் மனதை நாம் எப்படி மாற்றலாம் என்று எண்ணி அதன்படி செயல்படலாமே.?

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.

தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய இன்னும் அழுத்தமான கதைக்காக காத்திருப்போம் என்று கூறிக் கொண்டு விமர்சனத்தை முடித்துக் கொள்ளலாம். – 2.5/5

Related post