விரூபாக்‌ஷா விமர்சனம்

 விரூபாக்‌ஷா விமர்சனம்

சாய் தரம் தேஜ், சம்யுக்தா நடிப்பில், கார்த்திக் வர்மாவின் இயக்கத்தில், சுகுமார் எழுத்தில் உருவாகியுள்ள படம் “ விரூபாக்‌ஷா”.

ஆந்திராவில் சில தினங்களுக்கு முன் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை கண்டு வசூல் சாதனை செய்த இப்படத்தை, மிக குறுகிய காலத்தில் டப் செய்து தற்போது தமிழிலில் வெளியாகவுள்ளது.

எதை பேசுகிறது இப்படம்?

செய்வினை, சூன்யம், மந்திரம் மற்றும் அமானுஷ்யம் என பலவற்றை பற்றியும். நாம் பார்ப்பதை மட்டுமே வைத்து நாம் எந்த முடிவையும் எடுக்க கூடாது. அப்படி எடுக்கும் முடிவு எத்தகைய பின் விளைவை கொடுக்கும் என்பதை பற்றி பேசியுள்ளது இப்படம்.

கதைப்படி,

ஒரு கிராமத்தில் இருக்கும் மந்திரவாதி மற்றும் அவரின் மனைவியை செய்வினை செய்தமைக்காக மரத்தில் கட்டிவைத்து எரிகின்றனர். அதை பார்க்கும் அவர்களின் மகன். அகோரியாக தன்னை மாற்றிக்கொண்டு அந்த ஊரையே அழிக்க நினைக்கிறார்.

அந்த அகோரி நினைத்தது நடந்ததா? ஊர் மக்கள் என்ன ஆனார்கள்? என்பது படத்தின் மீதிக்கதை.

ஒரு வகையில் சொல்லப்போனால், அருந்ததி படத்தை போன்ற ஒரு சாயல் இப்படத்தின் மேல் விழும்.

ஆனால், படத்தின் விறுவிறுப்பும் ஓட்டமும் நம்மை வேறு எந்த சிந்தனைக்கும் கொண்டு செல்லாது.

கார்த்திக் வர்மாவின் இயக்கம் மிகவும் அனுபவமான ஒருவர் “பேண்டஸி” படத்தை இயக்கியிருந்தால் எப்படி இருக்குமோ அந்த தரத்தில் அவரின் இயக்கம் உள்ளது.

சுகுமாரின் எழுத்தும், திரைக்கதையும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியுள்ளது. மேலும், முதல் பாதி நம்மை இருக்கையின் ஓரத்தில் அமர வைக்கும். ஆனால், இரண்டாம் பாதி தொய்வாகவே இருக்கும். அதற்கு காரணம், முதல் பாதி நமக்கு கொடுத்த திருப்தி தான். அதே எதிர்பார்ப்பை நாம் இரண்டாம் பாதி மீதி வைத்தது தான்.

மேலும், க்ளைமாக்ஸ் காட்சி படத்தை முடிக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் முடித்து போல் இருக்கும்.

சாய் தரன் தேஜின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம். யதார்த்தமான ஒருவராக, ஹீரோயிசம் இல்லாமல் நம்மை போல் ஒருவராக இருந்தது தான் அவருடனும் கதையுடனும் நம்மை இணைத்தது.

மிக வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சம்யுக்தா. கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

படத்திற்கு தேவையான திகிலை கொடுத்தது இசை மட்டுமே. அஜினேஷ் லோக்நாத்தின் இசை பாராட்ட வேண்டிய ஒன்று தான். காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைத்துள்ளது.

ஷாம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு கை தட்டலை பெறுகிறது.

விரூபாக்‌ஷா – கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்  – (3.25/5)

Spread the love

Related post

You cannot copy content of this page