அநீதி விமர்சனம்

 அநீதி விமர்சனம்

பிரபல இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், பரணி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அநீதி”.

கதைப்படி,

உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அர்ஜுன் தான். இவருக்கு கோபம் வந்தால், கொலை செய்யும் அளவிற்கு தலைக்கு வெறி ஏறுகிறது. ஆனால், யாரையும் கொலை செய்யவில்லை..

இதற்காக மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் அர்ஜுன் தாஸ்.

வயதான பெண்மணி ஒருவர் இருக்கும் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார் துஷாரா., தனது குடும்ப வறுமையின் காரணமாக இந்த வேலையை செய்து வருகிறார் துஷாரா.

உணவு டெலிவரி செய்யும் சமயத்தில் துஷாராவை காண்கிறார் அர்ஜுன் தாஸ். துஷாராவிற்கு அர்ஜுன் மீது காதல் மலர, தனது காதலை அர்ஜூன் இடத்தில் கூறுகிறார் துஷாரா…

காதலை ஏற்க மறுத்து வெறி பிடித்தவர் போல் ஆகிறார் அர்ஜூன். தான் மன நோய்க்கு சிகிச்சை எடுத்து வருவதாக துஷாராவிடம் உண்மையை கூறுகிறார் அர்ஜூன்..

இச்சமயத்தில், துஷாரா வேலை செய்யும் வீட்டில் இருக்கும் அந்த வயதான பெண்மணி இறந்துவிட, அந்த பழி துஷாரா மற்றும் அர்ஜுன் மீது விழுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…

கதையின் நாயகனாக அர்ஜுன் தாஸ், எளிமையான நடிப்பைக் கொடுத்து நம்மை கவர்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

காட்சிகளில் கண்களை கவரும் நடிப்பைக் கொடுத்து அதிகமாகவே கவனம் ஈர்த்திருக்கிறார் துஷாரா விஜயன்.

கண்களால் பலடையும் கட்டிப் போடும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் துஷாரா..

அர்ஜூனுக்கும் துஷாராவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. ப்ளாஷ் பேக் காட்சியில் வரும் காளி வெங்கட், நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். தனிக்கவனம் பெறுகிறார்.

ஜே எஸ் கே சதீஷ் போலீஸ் வேடத்தில் மிடுக்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வனிதாவின் ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம்.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னணி இசையின் இரைச்சலை சற்று குறைத்திருக்கலாம்…

எட்வின் சகாயின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. இரவு நேர காட்சிகளை நன்றாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்..

கதையின் மையக்கரு ஆழமாக இருந்து கதையை பயணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் பாதி என த்ரில்லர் பாணியில் கதையை நகர்த்தி சென்றிருந்தாலும், இவ்வளவு கொலைவெறி வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.. க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் என்று தோன்றியது…

ஆங்காங்கே சின்ன சின்ன தொய்வு இருந்தாலும், துஷாராவின் கண்கள் அதை ஈடுகட்டி விடுகிறது..

மொத்தத்தில்,

அநீதி – அநியாயம் செய்யவில்லை.. –  2.75/5

Related post