கொலை விமர்சனம்

 கொலை விமர்சனம்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்து உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “கொலை”.

கதைப்படி,

மர்மமான முறையில் வளர்ந்து வரும் பாடகி மீனாட்சி இறந்து விடுகிறார். இந்த வழக்கை பாரன்சிக்கில் ஐபிஎஸ் ட்ரெய்னிங் எடுத்து வரும் ரித்திகா சிங் விசாரிக்கிறார்.

இந்த வழக்கை தன்னால் தனியாக கையாள முடியாது என்பதால், தனது குருவான விஜய் ஆண்டனியை அழைக்கிறார்.,

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் பல நாட்களாக கோமாவில் இருந்து வரும் தனது மகளின் நிலைமைக்கு தான்தான் காரணம் என்று, தனது போலீஸ் பணியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

ஒருகட்டத்தில், மீனாட்சியின் வழக்கினை விசாரிக்க ரித்திகாவுடன் களத்தில் இறங்குகிறார்.

மீனாட்சியை கொன்றது யார்.? எதற்காக கொல்லப்பட்டார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் சற்று கதையை விட்டு விலகியே நிற்கிறது. ப்ளாஷ் பேக்.. ப்ளாஷ் பேக்… என்று சென்று கொண்டே இருப்பதால் சற்று கூர்ந்து தான் கதையை கவனிக்க வேண்டியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் லுக் படத்திற்கு ஏற்றதாக இல்லை…

ரித்திகாவின் கதாபாத்திரம் சற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், இன்னும் பல காட்சிகளை அவருக்காக கொடுத்திருந்திருக்கலாம் என்று தோன்றியது.

கதைக்கேற்ற அழகு தேவதையாகவே காட்சிகளுக்கு காட்சி அழகாக தோன்றியிருக்கிறார் நாயகி மீனாட்சி. மொத்த கதையும் இவர் மீது செல்வதால், தனது கதாபாத்திரத்தை நன்கு அறிந்து அதன் மீது கவனமாகவே பயணமாகியிருக்கிறார் மீனாட்சி.

மற்றபடி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் இருவரும் தங்களது கதாபாத்திரத்தின் மகத்துவத்தை நன்றாகவே புரிந்து நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா சங்கர் கவனம் பெறுகிறார்.

கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை படத்திற்கு பக்கபலமாக நின்றிருக்கிறது.

படத்தின் மிகபெரும் பலம் அல்லது மிகப்பெரும் தூண் என்றே ஒளிப்பதிவை கூறலாம். ஹாலிவுட் தரத்திற்கான மேக்கிங்கை கொடுத்து அதிகமாகவே கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்.

கதை ஓகே என்றாலும், திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதால் நம்மால் பொறுமை காக்க முடியவில்லை.

கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் நன்றாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். ஒரு சில படங்களில் வந்த கதை தான் என்றாலும், த்ரில்லர் கதைகளை ரசிக்கும் ரசிகர்களை தன் பக்கம் அதிகமாகவே இழுத்திருக்கிறது இந்த “கொலை”..

கொலை – திரைக்கதை டல் அடித்தாலும், மேக்கிங்கில் கிங் தான்…. – 3/5

Related post