பெல் விமர்சனம்

 பெல் விமர்சனம்

வெங்கட் புவன் இயக்கத்தில், ராபர்ட் இசையமைப்பில் குரு சோமசுந்தரம், ஸ்ரீதர், நிதிஷ் வீரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் தான் “பெல்”.

கதைப்படி,

ஒரு மலைப் பிரதேசத்தில் சிலர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் கண்பார்வையற்ற ஸ்ரீதரைக் கைது செய்கிறது காவல் துறை.

அவரிடம் என்ன நடந்தது எனக் கேட்க, அவர் நடந்தவற்றைக் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்திய முனிவர் பாதுகாக்கப்பட வேண்டிய ஆறு மருத்துவ ரகசியங்களை அவரது ஆறு சீடர்களுக்குச் சொல்லி அதைப் பாதுகாக்கச் சொல்கிறார்கள்.

அதில் ஒன்று மனித உயிர்களைக் காக்கும் நிசம்ப சூதனி என்ற மூலிகையின் ரகசியம். அதைக் கைப்பற்றி வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்க நினைக்கிறார் குரு சோமசுந்தரம்.

அந்த நிசம்ப சூதனி பற்றி தெரிந்த ஸ்ரீதரிடம் இருந்து அது பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை…

தமிழகத்தில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் சாயலை கொண்டு வில்லனாக வந்துள்ளார் குரு சோம சுந்தரம். நடிப்பிலும், உடல் மொழியும் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை பிறருக்கு கற்பிக்கும் விதத்தில் நடித்துள்ளார் குரு சோம சுந்தரம்.

படக் கதையை விளக்கும் ஸ்ரீதர் கண் பார்வையற்றவர் என்பதால், அவர் மனதில் சித்தரித்திருக்கும் காட்சியாக வருகிறார் நிதீஷ் வீரா.

எனவே, கதையை காட்சி படுத்திய விதமும், திரைக்கதையும் சற்று குழப்பமாக அமைந்தாலும், மிகவும் ஒரு புதிய முயற்சி தான். இந்த முயற்சிக்காக படக்குழுவை பாராட்டியாக வேண்டும்.

மூலிகை ரகசியம், அதைக் காப்பாற்றத் துடிக்கும் கதாநாயகன், அதைக் கைப்பற்றத் துடிக்கும் வில்லன், இருவருக்கும் உதவியாக சிலர், மலையில் நடந்த மரணங்களைப் பற்றி விசாரிக்கும் காவல் துறை என இரண்டு மணி நேரப் படத்தைப் பரபரப்பாகவே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

க்ரைம் திரில்லராக மட்டும் நகர்ந்துவிடக் கூடாதென கதாநாயகனுக்கு ஒரு காதலி, அவருடைய நண்பருக்கு ஒரு காதலி என படத்தில் காதலையும் சேர்த்திருக்கிறார்கள்.

ராபர்ட் பின்னணி இசை, பரணி கண்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தது.

பெல் – சத்தமாக ஒலித்துள்ளது.

Related post