பொம்மை விமர்சனம்

 பொம்மை விமர்சனம்

எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ஷாந்தினி நடிப்பில், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “பொம்மை”.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு மனிதனுக்கு சிறுவயதில் இருந்த ஏக்கம். பல காலத்திற்கு பின், அந்த ஏக்கத்தின் பாதிப்பு எப்படி மாறுகிறது? ஒரு மனிதனுக்கும், பொம்மைக்கும் இடையேயான ஒரு காதலை த்ரில்லர் பாணியில் பேச முயற்சித்துள்ளது இப்படம்.

கதைப்படி,

சிறு வயதில் அம்மாவை இழக்கிறார் ராஜு (எஸ் ஜெ சூர்யா). அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் தான் நந்தினி. ஆனால், ஒரு சமயம் காணாமல் போகிறார் நந்தினி.

இதனால் மிகுந்த வேதனையடையும் ராஜு மருத்துவர் ஒருவரை அணுகுகிறார்.

தினமும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார் மருத்துவர். வருடங்கள் உருண்டோட, பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் கம்பெனியில் பணிபுரிகிறார் எஸ் ஜே சூர்யா.

நிறைய பொம்மைகள் இருக்கும் அந்த கம்பெனிக்கு, ஒரு பொம்மை வருகிறது. அதில், உதட்டுக்கு கீழே பெரிய அளவில் மச்சம் இருப்பதை பார்க்கிறார்.

அப்போது அந்த பொம்மை மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது அதற்கு காரணம் சிறு வயதில் தொலைந்து போன நந்தினிக்கும் அதே போன்று அதே இடத்தில் மச்சம் இருக்கும்.

இந்நிலையில், அந்த பொம்மைக்கு வண்ணம் தீட்டி வைத்திருப்பார் எஸ் ஜே சூர்யா. மாத்திரை எடுத்துக் கொள்ளாத நாளன்று பொம்மையை பார்க்கும் போது அது எஸ் ஜே சூர்யாவின் கண்களுக்கு ப்ரியா பவானி சங்கராக (நந்தினி) தெரிகிறார்.

தினமும் மாத்திரைகளை உட்கொள்ளாமல், நந்தினியுடன் பேசிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருப்பார் எஸ் ஜே சூர்யா. (அவரின் இமேஜினேசனில்)

ஒருநாள் பொம்மையை விற்று விடுகிறார்கள். இதனால், வெறி பிடித்தவர் போல் சுற்றித் திரிகிறார் எஸ் ஜே சூர்யா.

வெறி பிடித்த எஸ் ஜே சூர்யா, அந்த பொம்மையை விற்ற கம்பெனி சூப்ரவைசர் ஒருவரை யாருக்கும் தெரியாமல் கொன்றும் விடுகிறார்.

கொலைக் குற்றவாளி யாரென்று தெரியாது தேடி அலையும் போலீஸிடம் எஸ் ஜே சூர்யா சிக்கினாரா.? பொம்மையை எஸ் ஜே சூர்யா கண்டு பிடித்தாரா.? கண்டுபிடித்து என்ன செய்தார்.? என்பதே படத்தின் மீதிக் கதை…

வழக்கம் போல், எஸ் ஜெ சூர்யா தனது அசத்தலான நடிப்பை இப்படத்திலும் செய்து நம்மை ரசிக்க வைத்துள்ளர். “இறைவி” படத்தில் வரும் ரயில்வே ஸ்டேஷன் காட்சி போல். இப்படத்தில் “போலீஸ் ஸ்டேஷன்” காட்சி ஒன்று உண்டு.

அந்த காட்சியில் அபாரமான நடிப்பை வெளிபடுத்தி நம்மை வியக்க வைத்திருந்தாலும், பொம்மையுடன் அவர் பேசிப் பழகும் காட்சி நம்மை சோதித்து விட்டது.

இப்படத்தில் ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திர தேர்வு தவறான ஒன்று தான். பொம்மைக்கு உண்டான எந்த ஒரு உடல் மொழியும், உடல் வடிவமும் அவரிடம் இல்லை.

இப்படத்தின் குறை என்று பார்த்தால், கழுத்துக்கு மேல் மட்டும் பொம்மைக்கு உண்டான கலர் அடித்துவிட்டு, கழுத்துக்கு கீழ் பகுதியில் மனித உடலை அப்படியே விட்டது அப்பட்டமான தவறு.

கொடுத்த காட்சியை சிறப்பாக சேர்த்துள்ளார் சாந்தினி.

சைக்கோ த்ரில்லராக எடுக்கலாமா? கமெர்சியல் படமாக எடுக்கலாமா? என்ற குழப்பத்துடன் எடுத்த ஒரு படமாக தான் இருக்கிறது பொம்மை.

எதற்காக இந்த குழப்பத்தில் இருந்தார் ராதா மோகன் என்பது அவருக்கு மட்டுமே தெறியும். ஒரு வேலை ராதா மோகனின் கதைக்குள் எஸ் ஜெ சூர்யா தலையிட்டாரா? என்ற பல கேள்விகள் படம் பார்ப்போருக்கு எழும்.

படத்தின் முதல் பாதியே தொய்வான ஒன்று தான். படத்தின் இரண்டாம் பாதி த்ரில்லர் பாணியில் இருந்தாலும், எளிதில் கணிக்க முடியும் வகையில் அமைந்துள்ளது.

படத்துக்கு ஏற்ற இசையை கொடுத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

இயக்குனர் ராதா மோகன் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றமாக தான் அமையும்.

பொம்மை – உணர்வற்றது – (2.75/5)

Related post