எறும்பு விமர்சனம்

 எறும்பு விமர்சனம்

சுரேஷ் ஜி இயக்கத்தில், சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “எறும்பு”.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு கிராமம்… நடுத்தர குடும்பத்திற்கு வரும் கடன் சுமை… அதை கையாளும் விதத்தையும், யதார்த்தத்தையும் பேசுகிறது இப்படம்.

கதைப்படி,

எளிமையான குடும்பத்தைச் சார்ந்த சார்லிக்கு இரண்டு குழந்தைகள் (மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக்). மனைவி தவறிவிட்டதால் இரண்டாவதாக சூசன் ராஜை திருமணம் செய்து கொள்கிறார். சூசனுக்கு ஒரு கைக்குழந்தை.

சித்தியான சூசன் ராஜுக்கு மோனிகாவும் சக்தியும் மூத்த தாரத்தின் பிள்ளைகள் தானே என்ற எண்ணத்துடனே பழகுகிறார்.

கரும்பு வெட்டும் கூலி வேலை பார்க்கும் சார்லியும் சூசன் ராஜும், எம் எஸ் பாஸ்கரிடம் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.

அதன்பின், எம் எஸ் பாஸ்கரின் நெருக்கடி தாளாமல், இன்னும் 20 நாளுக்குள் மொத்த பணத்தையும் சபதம் எடுக்கிறார் சார்லி.

சூசன் ராஜும் சார்லியும் கரும்பு வெட்டுவதற்காக பக்கத்து ஊருக்கு செல்ல, வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பதால், அதற்குள் பணத்தை ரெடி பண்ணி எம் எஸ் பாஸ்கருக்கு கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார் சார்லி.

அப்போது, தனது பேரனான சக்திக்கு வீட்டில் இருந்த சித்தியின் சிறிய மோதிரத்தை அணிந்து விடுகிறார் சார்லியின் தாயார்.

அந்த மோதிரத்தை தொலைத்துவிடுகிறான் சக்தி. சித்தி வந்து கேட்டால் என்ன செய்வது என்று செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் சக்தியும் மோனிகாவும்.

தனது சித்தி வீட்டிற்கு வருவதற்குள் மோதிரத்தை கண்டுபிடித்தார்களா.? எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடன் தொகையை சார்லி திருப்பி கொடுத்தாரா.? என்பது படத்தின் மீதிக் கதை…

ஒரு மலையாள படத்தின் பீல்-லை கொடுத்து விட்டார் இயக்குனர் சுரேஷ்.ஜி. அதற்கான காரணம் மலையாள சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு எளிதில் புரியும்.

ஆம், ஒரு மலையாள படம் இப்படி தான் இருக்கும். தேவையான காட்சிகள், ஒரு சில லொகேஷன்ஸ், நடிகர்களின் தேர்வு, கதைக்கான முக்கியதுவம், என்று முழுக்க முழுக்க கதையையும் களத்தையும் மட்டுமே நோக்கியிருக்கும்.

அந்த வகையில் தான் “எறும்பு” திரைப்படமும். பிரமாண்டமான பொருட்செலவோ, பிரமாண்டமான நட்சத்திர பட்டாளமோ எதுவுமில்லாமல் ஒரு குடும்பம், ஒரு தெரு என, கேமரா செல்லும் இடமெல்லாம் கிராமத்து அழகை காட்டி, கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சுரேஷ்.

முதல் பாதி நம்மை கனெக்ட் செய்ய நேரம் எடுத்து போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் சிறுவர்கள் ஓடிய ஓட்டமும் நம் எண்ணமும் ஒரே கோட்டில் பயணிக்க தொடங்கும். அந்த அளவிற்கு விறுவிறுப்பான இரண்டாம் பாதியமைத்து நம்மை திருப்தி செய்துள்ளார் இயக்குனர்.

இந்த ஆண்டு அறிமுகமாகி வெற்றி கண்ட இயக்குனர்களான, கணேஷ், மந்திர மூர்த்தி, விநாயக் சந்திரசேகர் பட்டியலில் சுரேஷ் இணைந்துள்ளார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

சார்லியின் நடிப்பில் இம்முறை யதார்த்தம் குறைவு. நடிப்பே சற்று அதிகம்.

சக்தி மற்றும் மோனிகா இருவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பச்சையம்மா மற்றும் முத்து என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய இருவரும் கிராமத்தில் இருக்கும் ஓர் மனிதரையோ, உறவையே நினைவுக்கு கொண்டு வரும்.

கண் கலங்க வைக்கும் காட்சிகளில் கை தட்டல்களை பெறுகிறார் ஜார்ஜ் மரியன்.

சிறுமி மோனிகா அம்மாவுக்காக ஏங்கி அழும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் சித்திக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் காட்சி, பரோட்டாவிற்கு கிடைக்காத ஆம்லேட் கிடைக்கும் காட்சி, சித்தி தண்ணீர் எடுத்து வைக்கும் காட்சி, என கண்கலங்க வைக்கும் காட்சிகள் ஆங்காங்கே எட்டிப் பார்க்க வைத்தது இயக்குனரின் கைவண்ணம்.

சித்தி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சூசன் ராஜ்.

வட்டிக்காரர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். எப்போதும் போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பை மட்டுமே கொடுக்கும் எம் எஸ் பாஸ்கர். இப்படத்தில் மீண்டும் நம்மை கவர்ந்துள்ளார்.

படத்தின் பின்னணி இசை க்ளைமாக்ஸ் காட்சிக்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.

படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறது கே எஸ் காளிதாஸின் ஒளிப்பதிவு.

எறும்பு – சிறுவர்களின் குறும்பு  – (3.5/5)

Related post