குட் நைட் விமர்சனம்

 குட் நைட் விமர்சனம்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் “குட் நைட்”.

எதை பேசுகிறது இப்படம்?

நம் வாழில் தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பகுதி. அதிலும் தவிர்க்க முடியாத ஒன்று “குறட்டை”. அந்த குறைட்டையையும், அதனால் ஹீரோ மற்றும் அவரின் குடும்பம் சந்திக்கும் இன்னல்களையும் ஜாலியாகவும், யதார்த்தமாகவும் பேசியுள்ளது இப்படம்.

கதைப்படி,

தூங்கும் போது, அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர் “மோகன்” (மணிகண்டன்). இதனால், தங்கை, வீட்டின் அருகில் இருப்பவர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரும் அவரை “மோட்டார்” மோகன் என்று கேலி செய்து வருகின்றனர்.

அவர் காதலித்த பெண் குறட்டையை ஒரு காரணம் காட்டி இவரை வேண்டாம் என்கிறார். இதனால் அதிக விரக்தியில் இருக்கும் மணிகண்டனுக்கு, அணு(மீத்தா) உடன் காதல் ஏற்படுகிறது. ஆனால், தன் குறட்டை பிரச்சனையை மறைத்து அணுவை திருமணம் செய்கிறார் மோகன்.

அதன் பின், மோகன் மீதுள்ள காதல் காரணமாக மோகனின் குறட்டையை சமாளித்துக் கொள்கிறார். ஆனால், தொடர் தூக்கமின்மை காரணமாக அணுவின் உடல் நலம் பாதிப்படைகிறது. இதை அறிந்த மோகன் என்ன செய்தார்? குறட்டை பிரச்சனை தீர்ந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.

கமல் ஹாசனை பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டுள்ளதாக பல நேர்காணலில் மணிகண்டன் தெரிவித்திருப்பார். தற்போது, மணிகண்டனின் நடிப்பு பலருக்கும் பலவற்றை கற்றுத்தரும். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனத்திலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் மணிகண்டன்.

அமைதியான பெண்ணாகவும், அன்பான ஒருவராகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார் மீத்தா ரகுநாத்.

ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, கௌசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் என படத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே. அவை அனைத்தும் நமது மனதில் நிற்கும் கதாபத்திரமாக அமைந்தது தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் கதை தேர்வு, காதாபாத்திர தேர்வு என இரண்டிலும் சரியான முடிவு செய்து படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

முழு படத்தையும் கலகல வென எடுத்து நமக்கு பெரும் திருப்தியை தருகிறது. சீரியஸ் காட்சிகளில் கூட நம்மை சிரிக்க வைத்து புதுமையாக இருந்தது.

சிம்பிள் கதையை வைத்து, 2 மணி நேரம் முழுவதும் நம்மை எண்டர்டெயின் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இப்படம் பார்க்கும் போது வராது.

சஷான் ரோல்டன் இசை படத்தை ஒருபடி தூக்கி நிறுத்தியுள்ளது. பாடல்கள் சூப்பர்.

குட் நைட் – தூங்காமல் பார்க்கலாம்  – (4.25/5);

Spread the love

Related post

You cannot copy content of this page