இராவண கோட்டம் விமர்சனம்

ஷாந்தனு, “கயல்” அனந்தி, பிரபு, இளவரசு நடிப்பில், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “இராவண கோட்டம்”. இப்படத்தை “திட்டக்குடி” கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
எதை பேசுகிறது இப்படம்?
கருவேல மரம் பற்றியும், அதை வைத்து நடக்கும் சாதி அரசியலையும் உரக்க பேசிய படம் தான் “இராவண கோட்டம்”.
கதைப்படி,
மேல்தெரு, கீழ்தெரு என இரு பிரிவினைகளை கொண்ட ஒரு கிராமம் ராமநாதபுர மாவட்டத்தில் இருக்கிறது. அதில், மேல்தெருவின் தலைவராக பிரபுவும், கீழ் தெருவின் தலைவராக இளவரசுவும் ஊரை கட்டுக்குள் வைக்கின்றனர்.
மேலும், அந்த ஊருக்குள் பிரிவினையை உண்டாகி அரசியல் லாபம் அடைய காத்திருக்கிறது, பி.எல்.தேனப்பன் மற்றும் அருள் தாஸ் தலைமையிலான அரசியல் அணி.
இதனை தடுக்கவும், ஊர் ஒற்றுமையை நிலைநாட்டவும் பாடுபட்ட பிரபு என்ன ஆனார்? ஷாந்தனு ஊருக்காக என்ன செய்தார்? சாதி பிரிவினையை உண்டாக்குகிறதா இப்படம்? என்ற கேள்விகளுக்கு பதில் இரண்டாம் பாதி.
ஷாந்தனுவின் நடிப்பு பாராட்ட வேண்டிய ஒன்று. காரணம், பெரிய வீட்டுப்பிள்ளை, ஹீரோ, ஊரை கட்டுக்குள் வைக்கும் ஒருவர் என எந்த ஒரு சினிமாட்டிக் தோற்றம் இல்லாமல் சாமியானாய் கலக்கியுள்ளார் சாந்தனு. முந்தைய படங்களை விட “இராவண கோட்டத்தின்” மூலம் அவருக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும்.
கயல் ஆனந்தியின் கதை தேர்வு வழக்கம் போல் சரியான ஒன்று தான். சிறப்பான ஒரு பாத்திரம், ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில் அவர் சிறிது ஓவர் ஆக்டிங் செய்துவிட்டாரோ என்ற ஒரு எண்ணம்.
மேலும், ஷாந்தனுவின் நண்பராக நடித்தவருக்கு கதாபாத்திரவலு அதிகம், அதனை சுமந்து நடிப்பது எளிதல்ல. ஆனால், அதையும் மிக எளிமையாக செய்திருக்கும் அவருக்கு தனி பாராட்டுக்கள்.
படத்தின் பலம் என்று பார்த்தல், ஜஸ்டின் பிரபாகரனின் இசை தான், படம் முழுக்க நம்மை ரசிக்க வைத்ததும் அது தான்.
விக்ரம் சுகுமாரனின் கதை தேர்வும், தைரியமும் பாராட்ட வேண்டிய ஒன்று, கிட்டத்தட்ட 50 ஆண்டு கால அரசியலை இளசுகளுக்கு புரியும் விதத்தில் சொல்லிவிட்டார். மதயானை கூட்டம் படத்திற்கும் “இராவண கோட்டம்” படத்திற்கும் உள்ள வித்யாசம் பெரிதளவு தான்.
என்ன தான் மிக தைரியமாக கருவேல மரத்தின் அரசியலை பேசியிருந்தாலும், அதற்கான தீர்வையும், கருவேல மரத்தின் பாதிப்பையும் கிராம மக்கள் மனதில் விதைத்துள்ளார் விக்ரம் சுகுமாரன்.
இராவண கோட்டம் – ரோஜா தோட்டம் – (3.5/5)