ஜப்பான் விமர்சனம்

 ஜப்பான் விமர்சனம்

இயக்கம்: ராஜூ முருகன்

நடிகர்கள்: கார்த்தி, அனு இமானுவேல், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், நவநீத்

ஒளிப்பதிவு: ரவி வர்மன்

இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்

எடிட்டர்: பிலோமின் ராஜ்

கதைப்படி,

பிரபல நகைக்கடை ஒன்றில் மிகப்பெரிய அளவில் திருட்டு ஒன்று நடக்கிறது. சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன. இந்த நகைகளில் லோக்கல் மந்திரி ஒருவரின் ஷேரும் இருப்பதால், திருடனை உடனே பிடிக்க தீவிரம் காட்டுகிறது காவல்துறை.

விஜய் மில்டன் தலைமையில் ஒரு டீமும், சுனில் தலைமையில் ஒரு டீமும் திருடனை பிடிக்க செல்கின்றனர். திருடு போன இடத்தில், திருடியது பிரபல திருடனான ஜப்பான்(கார்த்தி) என்று உறுதிபடுத்துகிறது போலீஸ்.

அதற்கான தடயங்களை கைப்பற்றி, கார்த்தியை பிடிக்க செல்கிறது இந்த டீம். சுனில் தலைமையிலான ஒரு டீம், கூலித் தொழிலாளியான நவநீத் என்பவரை பிடித்து மிகக் கடுமையாக விசாரிக்கிறது.

பல திருட்டுகளை செய்த கார்த்தி, வெளியே ஜாலியாக சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில், போலீஸார் சிலரை கைக்குள் வைத்திருக்கும் கார்த்தி இந்த திருடு பற்றி கேள்விபடுகிறார்.

தான் அந்த திருட்டை செய்யவில்லை என்று போலீஸில் கூறுகிறார். போலீஸார் அதை நம்ப மறுக்கின்றனர்.

இறுதியாக அந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபர் யார்.? எதற்காக அந்த பழியை கார்த்தி மீது போட வேண்டும்..?? அப்பாவி குடும்பஸ்தனான நவநீத் என்ன ஆனார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

திருச்சியில் பிரபல நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற மிகப்பெரும் திருட்டை மையப்படுத்தி இக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். சுருட்டை முடியுடனும், வித்தியாசமான உடல் மொழியோடும், வித்தியாசமான குரலோடு, உடையோடும் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார் நடிகர் கார்த்தி.

தனக்கான ஒத்துழைப்பை ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்தோடு பொருத்தமாக கொடுத்து வரும் கார்த்தி, இப்படத்திலும் அதை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்.

முதல் பாதி ஏனோ தானோவென்று போகும் கதையானது, இரண்டாம் பாதியில் கதைக்குள் நகர, கதை சூடு பிடிக்கிறது.

ஆக்‌ஷன் , செண்டிமெண்ட், துரோகம் என கதை வேறொரு கதைகளத்திற்கு நகர வேகமெடுக்கிறது படம்.

ஜி வி பிரகாஷின் இசை மிரள வைத்திருக்கிறது. பாடல்கள் ஓகே ரகமாக நகர்ந்தாலும், கார்த்தி பாடும் பாடல் ரசிக்க வைத்திருக்கிறது.

ரவி வர்மனின் ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. அதிலும், பீச் ஹோட்டலில் நடக்கும் சண்டைக் காட்சி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஏரியாவிற்குள் நடக்கும் சண்டைக் காட்சியை அதிரடியாக படமாக்கியிருக்கிறார் ரவி வர்மன்.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு ஷார்ப்.

முதல் பாதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி, கதைக்கான முக்கியத்துவத்தை கொடுத்திருந்தால் ஜப்பான் இன்னும் வேகம் எடுத்திருக்கும்.

ஜப்பான் – தீபாவளிக்கான ஆக்‌ஷன் விருந்து.. –  3/5

Related post