ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

 ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா, இளவரசு, நவீன் சந்திரா, சத்யன்,

ஒளிப்பதிவு: திருநாவுக்கரசு

இசை: சந்தோஷ் நாராயணன்

கதைப்படி,

1973ல் கதை நகர்கிறது. மதுரையில் ஜிகர்தண்டா க்ளப் ஒன்று இருக்கிறது. அதற்கு தலைவராக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரை போன்ற நால்வரின் உறுதுணையால் தென் தமிழகத்தில் தனது அரசியலை நகர்த்தி வருகிறார் அமைச்சராக வரும் இளவரசு.

அரசியலில் பெரும் தலைவராகவும் பெரும் நடிகராகவும் இருக்கும் ஷைன் டாம், அடுத்த முதல்வருக்கு அடித்தளம் போடுகிறார். அதற்கு இடையூறாக இருக்கிறார் இளவரசு.

இளவரசு உடன் இருக்கும் நான்கு தலைகளை சாய்த்து விட்டால் தனது ரூட் க்ளியர் என்று நினைக்கிறார் ஷைன் டாம்.

அதற்காக தனது உடன் பிறந்த தம்பியும் போலீஸ் அதிகாரியுமான நவீன் சந்திராவை அழைத்து விஷயத்தை கூற, நவீன் திட்டம் ஒன்றை போடுகிறார்.

நான்கு தலைகளை எடுக்க, நான்கு சிறை கைதிகளை வெளியே எடுத்து வருகிறார் நவீன். அதில், லாரன்ஸை அழிக்க எஸ் ஜே சூர்யாவை அனுப்புகிறார். திட்டம் தீட்டி லாரன்ஸை அழிக்க அவர் கோட்டைக்குள் நுழைகிறார் லாரன்ஸ்.

எஸ் ஜே சூர்யாவின் திட்டம் நிறைவேறியதா.? தமிழக அரசியல் என்னவானது.??

அதே சமயம் காட்டு யானைகளை தொடர்ந்து கொன்று குவித்து வரும் செட்டானி என்ற கதாபாத்திரத்தின் கதை என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸுக்கு இதுமிக முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும். சில தோல்விக்குப் பிறகு லாரன்ஸூக்கு இது நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும். ஏனென்றால், எந்தவித ஹீரோயிசம் இல்லாமல், படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக செய்து முடித்திருக்கிறார் லாரன்ஸ்.

அதிலும் இரண்டாம் பாதியின் பிற்பாதியில் படம் முழுவதையும் ஆக்கிரமித்து மிரள வைத்திருக்கிறார் லாரன்ஸ். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்கவும் வைத்து விட்டார்.

ஆக்‌ஷனில் எப்போதும் மிரட்டும் எஸ் ஜே சூர்யா, இப்படத்தில் ஒரு அடக்கமான நடிப்பை வேறு விதமாக கொடுத்திருக்கிறார். லாரன்ஸுக்கு இணையான நடிப்புக் காட்சிகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

செட்டானி கதாபாத்திரத்தில் நடித்தவர் யானையுடனான காட்சிகளில் கண்களை விரியடைய வைத்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக நடித்த நவீனை பார்த்தாலே கொலை வெறி வரும் அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

படத்தின் நாயகர்கள் என்றால் இவர்கள் மூவர் தான்.

ஆர்ட் டைரக்டர்
இசையமைப்பாளர்
ஒளிப்பதிவாளர்.

இவர்கள் மூவர் தான் தூண் போல் வந்து நிற்கிறார்கள். 1970 காலகட்டம் என்பதால், அதற்கான மெனக்கெடலை ஆர்ட் இயக்குனர்களான பால சுப்ரமணியன் மற்றும் குமார் ஞானப்பன் இருவரும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட குறை கூற முடியாத அளவிற்கு தனது வேலையை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள்.

பாடல்களிலும் குறிப்பாக பின்னணி இசையிலும் அதிர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையில் அதிகமாகவே மெனக்கெட்டிருந்தது படத்தில் நன்றாகவே தெரிந்தது.

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு மாஸ் காட்டியிருக்கிறது. யானையுடனான சண்டைக் காட்சிகளை படமாக்கிய விதம், பாடல் காட்சிகள் என வெளிச்சத்தை அளவாக கொடுத்து படத்தினை அழகாக்கியிருக்கிறார்.

விறுவிறுப்பாக செல்லும் கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வு மட்டும் சற்று நெருடலே தவிர, படத்தின் ஆட்டம் குறையவில்லை. குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் டச் தான். கடைசி காட்சியை முதல் பாகத்தோடு கனெக்ட் செய்திருந்தது நச்.

மொத்தத்தில்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – தீபாவளிக்கான சரவெடி.. – 3.25/5

Related post