ஜோ விமர்சனம்

 ஜோ விமர்சனம்

இயக்கம்: ஹரிஹரன் ராம்

நடிகர்கள்: ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா,

ஒளிப்பதிவு: ராகுல் கே ஜி விக்னேஷ்

இசை: சித்து குமார்

கதைப்படி,

பள்ளி பருவத்தில் ஆரம்பிக்கிறது ஜோ’வின் வாழ்க்கை.. இங்கு ஜோ’வாக வந்திருப்பவர் நாயகன் ரியோ. நண்பர்களோடு அரட்டை, கும்மாளம் என ஜாலியாக செல்கிறது ஜோவின் வாழ்க்கை..

பள்ளியைத் தொடர்ந்து கல்லூரி. கல்லூரியிலும் அதே ஜாலியான வாழ்க்கைத் தொடர, வழக்கம்போல நாயகி மாளவிகா மனோஜை கண்டதும் காதல் செய்கிறார்.

கேரளத்து பெண்ணான மாளவிகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பின், ஆங்காங்கே நின்று கொண்டு பாரப்பது, ரசிப்பது என செல்லும் ஒருதலை காதலானது, பின் இருதலை காதலாக மாறி விடுகிறது. இருவரின் காதலும் எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக செல்கிறது. கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வர, நாயகி மாளவிகா கேரளா சென்று விடுகிறார்.

போனில் மட்டுமே காதலை வளர்த்துக் கொள்கின்றனர் இருவரும். பிரிவு ஏற்பட்டதால் அவ்வப்போது சண்டையும் ஏற்படுகிறது. இருந்தாலும் இருவரும் ஆழமான காதலில் தான் இருந்தனர். இந்நிலையில், மாளவிகாவின் வீட்டில் வந்து பெண் கேட்கிறார் ரியோ.

அங்கு ஏதோ சலசலப்பு ஏற்பட, தனது குடும்பத்தினருக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டதாக ரியோவை விரட்டி விடுகிறார் மாளவிகா. இனி நாம் சேர மாட்டோம் என்றும் கூறி வெளியேற்றி விடுகிறார் மாளவிகா.

இந்த காட்சிகள் அனைத்துமே ப்ளாஷ் பேக் காட்சிகளாக வர, நிகழ்காலத்தில் மற்றொரு நாயகியான பாவ்யாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் ரியோ.

மாளவிகாவுடனான காதல் என்ன ஆச்சு.? திருமணமே வேண்டாம் என்று இருந்த பாவ்யாவை ஏன் ரியோ திருமணம் முடித்தார்.?? பாவ்யா திருமண வாழ்க்கையை வெறுக்க என்ன காரணம் என்பதே படத்தின் மீதிக் கதை.

இதற்கு முன் ரியோ சில படங்களில் நடித்தாலும், இது தான் முதல் படம் என்பது போல் நடித்திருக்கிறார். இதுதான்பா நடிப்பு.. இந்த அளவு போதுமே என்று தோள்தட்டி கொடுக்கும் அளவிற்கு அளவாகவும் கதைக்கு நிறைவாகவும் கொடுத்திருக்கிறார் ரியோ.

ஜோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ரியோ. ஒவ்வொரு படத்தின் பெயரும் ஒரு சில நடிகருக்கு அடைமொழி பெயராக கூடவே பயணிக்கும். அதேபோல, இந்த படம் ரியோவின் பெயர் கூடவே பயணிக்கும்.. ஜோ ரியோ என்று…

இனி ரியோவை ஜோ என்று அழைத்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை. பள்ளி பருவம், கல்லூரி பருவம், திருமண வாழ்க்கை என மூன்று கட்டமாக தனது நடிப்பையும் மெச்சியூரிட்டியையும் ஏற்றி வைத்து நடிப்பை கொடுத்திருக்கிறார் ரியோ. படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.

அழகு தேவதையாக வந்து காட்சி கொடுத்திருக்கின்றனர் இரு அழகிகளும்… மாளவிகா மற்றும் பாவ்யா காட்சிகளில் மட்டுமல்லாது நடிப்பிலும் தனது அழகியலை கொண்டு வந்திருக்கின்றனர்.

மலையாள காதல் படம் போல, காதல் இதமாக வருடி செல்வதெல்லாம் வேற லெவல்.. கல்லூரி காதல் இளைஞர்களை வெகுவாக கவரும்படியாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

மாளவிகாவின் அறிமுக காட்சியில் முதல் ஐந்து நிமிடங்கள் தேவதை போல அவரை ஒரு மடங்கு அதிகமாக அழகூற ஒளிப்பதிவு செய்தது நச்..

படத்தின் மிகப்பெரும் பலம், மற்றொரு தூண் என்று கூட கூறலாம் ஒளிப்பதிவை.. அவ்வளவு அழகாகவும் காட்சிக்கு காட்சி பெரிதான மெனக்கெடலை கொடுத்து நம்மை கதையோடு கதைகளத்தோடும் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ்.

சித்துகுமார் இசை வேற லெவல்.. படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றதில் பின்னணி இசைக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது.

படத்தின் கதை, கதாபாத்திரங்கள், திரைக்கதை என ஒவ்வொன்றையும் அளவாக எடுத்துச் சென்று ஒரு காதல் காவியத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஜிவி பிரகாஷ் குமாருக்கு எப்படி ஒரு பேச்சிலர் படம் அமைந்ததோ, அதே போல் ரியோவிற்கு ஜோ அமையும்.

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு இடத்திலாவது நமக்கு இப்படி ஒன்னு நடந்துச்சே என்று எண்ணினால் அது இயக்குனரின் வெற்றி, படத்தின் வெற்றி..

அப்படியாக, ஒரு இடத்தில் மட்டுமல்ல பல இடத்தில் நம்மை கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டார் இயக்குனர்.

சிகப்பு கம்பளம் விரித்து இயக்குனர் ஹரிஹரன் ராமை மகிழ்ச்சியோடு இந்த கோலிவுட் வரவேற்று விட்டது…

ஜோ – காதல் காவியம்.. –  3.5/5

Related post