காடப்புறா கலைக்குழு – விமர்சனம்

 காடப்புறா கலைக்குழு – விமர்சனம்

அறிமுக இயக்குனர் ராஜா குருசாமி இயக்கத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரி, ஸ்வாதி முத்து இவர்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “காடப்புறா கலைக்குழு”.

கதையின் நாயகனாக வரும் முனீஸ்காந்த், காடப்புறா கலைக்குழு என்ற பெயரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார். பல இன்னல்கள் பல துயரங்களைக் கடந்து கலை அழிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார்.

இல்லாதவர்களுக்கு ஓடி வந்து உதவும் நல்ல உள்ளம் கொண்வடராக வரும் முனீஸ்காந்திற்கு காளிவெங்கட் நல்ல நண்பன்.

அனாதையாக நின்ற ஹரியை சொந்த தம்பியாக எண்ணி வளர்த்து வருகிறார்., ஹரிக்கும் அதே ஊரில் இசைக் கச்சேரி குழு நடத்தி வரும் சூப்பர் குட் சுப்ரமணியின் தங்கையான நாயகி ஸ்வாதி முத்துவிற்கும் காதல்..

ஊர் தலைவராக வரும் மைம் கோபி, முனீஸ்காந்த் மீது அவ்வப்போது சீண்டல்களை செய்து வருகிறார். எதையும் சிரித்த முகத்துடனே எதிர்கொள்கிறார் முனீஸ்காந்த்.

ஹரியின் காதல் கைகூடியதா.?? கரகாட்ட கலையை பாதுகாக்க முனீஸ்காந்த் என்ன செய்தார்.?? அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

இதுவரை படங்களில் பார்த்த முனீஸ்காந்த் வேறு, இப்படத்தில் பார்த்த முனீஸ்காந்த் வேறு என்று வேறுபடுத்தி பார்க்கும் அளவிற்கு அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் முனீஸ்காந்த்.

எமோஷ்னல், காமெடி, வெகுளித்தனம் என கிடைக்கும் இடத்திலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் முனீஸ்காந்த். கலைக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமான காட்சிகளாக திரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

காளிவெங்கட்டும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல், நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருந்தார்.

காதலர்களாக ஹரி மற்றும் ஸ்வாதி முத்து இருவரும் ஜோடிகளாக ஜொலித்திருக்கிறார்கள்.

மற்றபடி, கதையில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் சரியான தேர்வாகவே தென்பட்டார்கள். பொருத்தமான கதாபாத்திரங்களுக்கு ஏற்றவர்களாக இருந்தனர்.

படத்திற்கு பக்கபலமாக இருபெரும் தூண்களாக வந்திருந்தனர் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும்.

வினோத் காந்தியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார்.

ஹரியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே பக்கபலமாக அமைந்திருந்தது.

கரகாட்ட கலையின் மகத்துவத்தையும் அதை அழியாமல் பேண வேண்டும், அடுத்த தலைமுறைக்கு அதை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் படத்தை இயக்கிய ராஜா குருசாமியின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அழகான குடும்ப பாங்கான, கலைநயத்தோடு படத்தை இயக்கி அதில் வெற்றி கண்ட இப்படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள்.

காடப்புறா கலைக்குழு – கலையின் வெற்றி… – 3/5

Related post