குய்கோ விமர்சனம்
இயக்குனர் : அருள் செழியன்
நடிகர்கள்: விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு
இசை: அந்தோணி தாசன்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
கதைப்படி,
திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தை மையப்படுத்தி கதைநகர்கிறது. உள்ளூரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த யோகிபாபு, தனது காதலால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் சவூதி சென்று விடுகிறார். அங்கு மன்னரின் ஒட்டகத்தை மேய்க்கிறார்.
அந்த சமயம், கிராமத்தில் யோகிபாபுவின் அம்மா இறந்து விட, யோகி பாபு கிராமத்திற்கு வருகிறார். வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என யோகிபாபு கூற, இறந்த அம்மாவை ஃபிரீஸர் பாக்ஸ் ஒன்றில் வைக்க ஏற்பாடு நடக்கிறது.
ஃபிரீஸர் பாக்ஸை அந்த கிராமத்திற்கு எடுத்து வருகிறார் விதார்த். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகிபாபு தங்களுக்கு கொடுக்கப்பட்டதை மிக அழகாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள். முதல் பாதி முழுவதும் தனது யதார்த்த நடிப்பால் விதார்த் அனைவரையும் கவர, இரண்டாம் பாதியை தனக்காக்கி இருக்கிறார் யோகிபாபு. செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் யோகிபாபு.
படத்தில் எந்த கேரக்டரும் நெகடிவ் கேரக்டர் இல்லை என்பதால், படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அனைவரும் பாஸிடிவ் எனர்ஜியோடு இருக்கிறார்கள். நம்மையும் அதேபோல் பாஸிடிவ் எனர்ஜியோடு வைத்திருக்கிறார்கள்.
வாழ்வில் பணம் மட்டும் முக்கியமல்லை என்பதையும், படிப்பும் முக்கியம் என்பதையும், பெற்ற தாய் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நம்மை கண்கலங்க வைத்திருக்கிறார்.
கிராம வாழ்வியல் என்பதால், கிராமத்தில் இருக்கும் ஒரு சில காமெடி காட்சிகள் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கிராமத்தோடு ஒன்றி நம்மையும் நடைபோட வைத்துவிட்டார் இயக்குனர் அருள் செழியன்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு அழகான கிராம வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்ததற்காக இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம்.
கிராமத்து பாட்டி ஆரம்பித்து இளசுகள் வரை அனைவரையும் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
அந்தோணி தாசனின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். கதையோடு சேர்ந்து பயணிக்கும் பாடலாக கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒரு படத்தோட, கதையோட பாட்டு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை இந்த படம் பார்த்து ஒரு சில இசையமைப்பாளர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னணி இசை பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. காட்சிகளை எந்த இடத்திலும் டிஸ்டர்ப் செய்யாமல் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நச்… கிராமத்தையும் அதன் ஓட்டத்தையும் கொடுத்து அந்த கதாபாத்திரத்தோடு நாமும் சேர்ந்து பயணித்து செல்வது போன்ற ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
குய்கோ – சிறந்த கிராம வாழ்வியல்.. – 3.5/5