லால் சலாம் விமர்சனம்

 லால் சலாம் விமர்சனம்

இயக்கம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர்கள்:‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், ஜீவிதா, அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமையா, ஆதித்ய மேனன், விவேக் பிரசன்னா

ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி

இசை: ஏ ஆர் ரகுமான்

தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்

கதைப்படி,

1990களில் நடக்கிறது படத்தின் கதைக்களம். கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அப்போது சண்டை ஏற்பட்டு ஊரில் மிகப்பெரும் மதக்கலவரம் ஏற்படுகிறது. கலவரத்தில் விக்ராந்தின் கையை உடைத்து விடுகிறார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷாலை கொல்வதற்காக துரத்துகிறார்கள். இந்துக்களுக்கும் முஸ்லீம்காரர்களுக்கும் கலவரம் ஏற்பட்டு ஊரில் போலீஸ் குவிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் மேலும், கலவரம் ஏற்படாமல் இருக்க விஷ்ணு விஷால் போலீஸில் சரணடைகிறார்.

மும்பையில் மிகப்பெரும் செல்வந்தரான ரஜினிகாந்தின் மகன் தான் விக்ராந்த். தன் மகனுக்காக எதையும் செய்யக் கூடியவர் ரஜினிகாந்த். தனது நெருங்கிய நண்பனின் மகன் தான் விஷ்ணு விஷால்.

இதன் பிறகு நடக்கும் கதையே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஷ்ணு விஷால் மீது அதிகமாக கதை பயணிக்கிறது. எதற்காக இந்த கலவரம், கலவரத்தில் என்ன நடந்தது என்பதை இடைவேளை முடிந்தும் கூறாமல் இருப்பதால், படத்தின் மையத்திற்குள் நம்மால் செல்ல முடியவில்லை.

அதன்பிறகு கூறியபோது படத்திற்கு எண்ட் கார்ட் போட்டு விடுகிறார்கள். முழுக்க முழுக்க கிரிக்கெட்டை சுற்றி நடக்கிறது என்று சென்று கொண்டிருக்கும் போது திடீரென திருவிழாவை சுற்றி கதை நகர்கிறது.

அதன்பிறகு கிரிக்கெட் வருகிறது. மீண்டும் திருவிழாவை சுற்றி கதை நகர்கிறது. ஒரு நிலைப்பாடாக இல்லாமல் கதை இங்கும் அங்குமாய் அலைக்கழித்தது சற்று போர் அடிக்கும்படியாக ஆகிவிட்டது.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது வசனங்கள் தான். அந்த வசனங்களை ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் பேசும் போது அது இன்னும் பலமாகிவிடுகிறது.

சிறப்பு தோற்றம் என்றாலும், தனது ஸ்டைலில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தாறுமாறாக செய்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர் எண்ட்ரீ கொடுத்த காட்சிகளில் திரையரங்குகளில் விண்ணை பிளக்கும் அளவிற்கு ரசிகர்கள் விசில் சத்தத்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள்.

விக்ராந்த், தம்பி ராமையா, லிவிங்க்ஸ்டன், என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை செய்திருக்கிறார்கள்.

மதத்தினைத் தாண்டி மனிதத்தை அனைவரும் நேசியுங்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் பெரிதாக ஒரு ஈர்ப்பைக் கொடுக்காவிட்டாலும், பின்னணி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது. கலவர காட்சிகள், ரஜினிக்கு வைக்கப்பட்ட காட்சிகள் என குறிப்பிட்டு சொல்லும்படியாக காட்சிகளை அழகாக கொடுத்திருக்கிறார்.

லால் சலாம் – மனிதம் – 3.5/5

Spread the love

Related post